4 மே, 2018

MITயின் டிரோன் ஆலோசகராக நடிகர் அஜித்குமார் நியமனம்


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமான சோதனை பைலட்டாகவும், அந்த அமைப்பின் அலோசகராகவும் நடிகர் அஜீத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் ஆளில்லா விமானம் தொடர்பான போட்டிகள் செப்டம்பர் மாதம் நடக்கிறது. இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் நவீன ஆளில்லா விமானம் ஒன்றை உருவாக்குகின்றனர்.

மருத்துவ துறைக்கு உதவும் இந்த டிரோன் அமைப்பின் Unmanned Aerial Vehicles (UAVs) ஆலோசகராகவும் சோதனை பைலைட்டாகவும் நடிகர் அஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர் அஜித், இங்கு ஒரு முறை வந்து பயிற்சி அளிக்க, ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் பெறுகிறார். அதையும் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழங்குமாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து எம்.ஐ.டியின் ஏரோஸ்பேஸ் துறை பேராசிரியரும் பொறுப்பு இயக்குனருமான செந்தில்குமார் கூறும்போது, ‘ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலியாவில் ஆளில்லா விமான சேலன்ஞ் போட்டிகள் நடக்கும். இதை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து நடத்துகிறது.

இதில் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் இருந்து பங்கேற்பார்கள். ஆனால், 55 சதவீதம் மட்டுமே இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவார்கள். நாங்கள் புதுமையான தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்தப் போட்டியில், சோதனை கூடம் ஒன்றிலிருந்து நோயாளியின் ரத்த மாதிரியை எடுத்து மீண்டும் சோதனை கூடத்துக்கு ஆளில்லா விமானம் மூலம் கொண்டு வர வேண்டும். இதை சரியாக கையாள வேண்டும். இதற்கு நடிகர் அஜித்தின் நிபுணத்துவம் கைகொடுக்கும்’ என்றார்.