கடன்களை தீர்த்து நிம்மதியை அளிக்கும் தீர்க்கும் ஸ்ரீ தோரண கணபதி

0
726

அகஸ்தியர் நாடி நூலில், பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ள ஸ்ரீ தோரண கணபதி பிரசன்ன துதியை தினமும் மூன்று முறை படித்துவர, கடன் பிரச்சினைகள் யாவும் நீங்கும்.

ஸ்ரீ தோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், ருணம் எனும் கடன் தீரும். சக்தி தேவியர் தனியாகக் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகாவுக்கு வலப்புறமாக சன்னதி கொண்டிருப்பார்.

ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குசாபாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீ தோரண கணபதி. ஸ்ரீ தோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.

செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீ தோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து 6 வாரங்கள் குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீ தோரண விநாயகரை தரிசித்து அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.

அத்துடன் கணபதியின் மேகலை-பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜெபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐந்து வகை பழங்களை படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து நிம்மதி பிறக்கும்.

ஆறு ஞாயிற்றுக் கிழமைகள் தோரண கணபதி சன்னதிக்கு சென்று அவருடைய சன்னதிக்கு பின் புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, ஐந்து வகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களை பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக்கடன்களும் விரைவில் வசூலாகும்.

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில் ஸ்ரீ சாரதாம்பாள் சன்னதியில் காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீ தோரண கணபதி, தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய
தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.

ஆலயங்களுக்கு சென்று வழிபட இயலாத நிலையில், வீட்டிலேயே ஸ்ரீ தோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ள ஸ்ரீ தோரண கணபதி பிரசன்ன துதியை தினமும் மூன்று முறை படித்துவர, கடன் பிரச்சினைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும்.