22 மார்., 2018

உணவிற்கு முன், பின் பழங்கள் சாப்பிடலாமா?

பொதுவாக நாம் உண்ணும் உணவில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது நல்லது. அப்படிப்பட்ட உணவுகள் முக்கியமாகப் பழங்களும் காய்கறிகளும்தான்பழங்களில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது.

நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை.


இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வராமல் தடுக்க முடியும். அன்றாடம் பழங்களைச் சாப்பிடுவதால் புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி போன்ற வியாதிகளை தடுக்கலாம். மேலும், பழங்களைச் சாப்பிடுவதால் நமக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம்.

ஆனால், நம்மில் பாதிபேருக்கு பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் என்பது குறித்து தெரியாது.

உணவுக்கு முன், உணவுக்கு பின் சாப்பிடுவதா, அல்லது எந்த மாதிரியான பழங்களை சாப்பிடுவது என குழப்பிக்கொள்வார்கள்.

உணவுக்கு முன், பின் எந்த பழங்கள் சாப்பிடலாம்?

பொதுவாகவே, எல்லாப் பழங்களிலும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் போன்ற உடலுக்கு மிக அவசியமான, நுண்ணுாட்டச் சத்துகள் அதிகம் உள்ளன.

அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள் எதுவாக இருந்தாலும், தாராளமாகச் சாப்பிடலாம்.

உணவுக்கு முன், உணவிற்கு பின் சாப்பிடும் பழங்கள் என்றெல்லாம் வகைப்படுத்தத் தேவையில்லை.

அதுபோல சிவப்பு நிறத்தில் உள்ள மாதுளம் பழத்தை சாப்பிடக் கூடாது என்று சொல்வதும் தவறு. இயற்கையாக பழங்களில் உள்ள சத்துகள் முழுமையாக உடலுக்கு கிடைக்க வேண்டும் என்றால், சமைத்த உணவை சாப்பிடுவதற்கு குறைந்தது அரை மணி நேரம் முன் அல்லது சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பின், பழங்கள் சாப்பிடலாம்.

பழங்கள் செரிமானம் ஆவது எளிது. ஆனால் சமைத்த உணவுசெரிமானம் ஆவது கடினம். இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடும்போது, பழங்களில் உள்ள சத்துகள், உடலுக்கு முழுமையாக கிடைக்காமல் போகலாம்.

உணவு செரிமானம் ஆவதற்கு மீத்தேன் உட்பட, ஐந்து பிரதான வாயுக்கள் வயிற்றில் சுரக்கும். பழங்களையும் சமைத்த உணவையும் சேர்த்து சாப்பிடும் போது, வாயுக்கள் சுரப்பது வழக்கத்தை விடவும் அதிகமாக இருக்கும்.