யோகத்தின் எட்டு நிலைகள் (அட்டாங்க யோகம்)

0
369
இராஜ யோகத்தில் பதஞ்சலி முனிவர் யோகத்தின் எட்டு படிகளை விளக்கி உள்ளார். இந்த எட்டு நிலைகளும் வரிசைக்கிரமமாக ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. ஒரு நிலை முடிவடையும் தருணத்தில் மறுநிலை ஆரம்பமாகும். முதல் நிலை, இரண்டாம் நிலை என எட்டு நிலைகளையும் ஒவ்வொன்றாகக் கடக்க வேண்டும். ஒரு நிலை முடிந்தவுடன் அடுத்தது. ஒரு நிலையைப் பயிலாமல் அடுத்த நிலைக்குச் செல்லவியலாது.
எடுத்தவுடனேயே யோகாசனம் செய்தலோ அல்லது தியானத்தில் ஈடுபடுதலோ யோகத்தின் உரிய பலனைத் தராது. விடாமுயற்சியும், தொடர்பயிற்சி செய்வதன் மூலம் இந்த எட்டு யோக நிலைகளும் வசமாகும். எட்டு நிலைகளைக் கொண்டுள்ளதால் இது சமசுகிருதத்தில் அஷ்டாங்க யோகம் (அட்டாங்க யோகம்) என்று விளக்கப்படுகிறது.
  1. இயமம்: தீயவை தவிர்ப்பு
  2. நியமம்: தன்னை நெறிப்படுத்தி ஒழுக்கம் பேணுதல்
  3. ஆசனம் அல்லது ஆதனம்: இருக்கை – யோகாசனம்
  4. பிராணாயாமம் (மூச்சைக் கட்டுப்படுத்தல்)
  5. பிரத்தியாகாரம் (புலனடக்கம்)
  6. தாரணை (மனம் ஒருமைப்படுத்தல்)
  7. தியானம்
  8. சமாதி (ஆழ்ந்த தியான நிலை)

 

இயமம் நியமத்துடன் சேர்ந்து வாழ்க்கையின் ஒழுக்கநெறி முறைகள் பற்றிக் குறிப்பிடுகின்றது. இவை இரண்டும் யோகியின் விருப்பு வெறுப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்தி ஏனையவருடன் உலகில் ஒற்றுமையாக இருக்க நெறிப்படுத்துகின்றன.  நல்லொழுக்கம் பேணுதல், தீய பழக்கங்களைக் கைவிடல் போன்றவை இங்கே கூறப்படுகின்றன. எது செய்யலாம் எது செய்யக்கூடாது என்பன இயமத்திலும் நியமத்திலும் போதிக்கப்படுகின்றன.
பத்து இயமங்கள் உபநிடதம் போன்ற வேதாகம நூல்களில் கூறப்பட்டுள்ளன. யோக சூத்திரத்தில் பதஞ்சலி முனிவர் விவரித்தது ஐந்து வகை இயமங்கள். திருமந்திரத்தில் திருமூலரும் இயமங்கள் குறித்துப் பாடியுள்ளார்.
பதஞ்சலி முனிவர் விவரித்த ஐந்து வகை இயமங்களாவன:
அகிம்சை: செயலிலோ அல்லது நினைப்பிலோ பிறருக்கு ஊறு விளைவிக்காத செயல். (கொல்லாமை)
சத்தியம் (வாய்மை): பொய் சொல்லாமலும் நேர்மையுடனும் திகழ்தல். இந்த முதல் இரண்டுமே பிரதான இயமங்கள்.
கள்ளாமை: திருடல் இல்லாமை
காமமின்மை: பிரம்மச்சாரியம் எனும் சொல் பதஞ்சலியால் பயன்படுத்தப்பட்டது, எனினும் பிரம்மச்சாரியம் எனும் சொல் வெவ்வேறு கருத்துகளில் கையாளப்படுகின்றது. பாலியல் உணர்வைத் தவிர்த்து சக்தியைத் தேக்கி வைத்தல் எனும் பொருளில்  யோகத்தில் பொதுவாகக் கருதப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, சுய இன்பம் மூலம் விந்து வெளியேறுவதால் சக்தி இழக்கப்படுகின்றது.
பேராசையின்மை : பொதுவாக நல்லதே நினைத்து நல்லதே செய்தல் இயமத்துள் அடங்கும். இவற்றைக் கடைப்பிடிப்பதால் மனமும் உடலும் ஆரோக்கியத்தை அடைகின்றது.
நியமம் என்பது ஒழுக்க விதிமுறைகளை வழுவாது கடைப்பிடித்தல் ஆகும். உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருத்தல், தவம், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல் போன்றன நியமத்துள் அடங்குகின்றன.
ஆசனம் (யோகாசனம்) குறிப்பிட்ட இருக்கை நிலையில் உடலை வைத்திருத்தல் மூலம் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்க உதவுகின்றது. இயமம், நியமம், ஆசனம் ஆகிய முதல் மூன்று நிலைகளும் சேர்ந்து பகிரங்க சாதனா எனப்படுகின்றது.
பிராணாயாமம் அல்லது பிராணாயம் என்பது சமசுகிருதச்சொற்களான பிராணா, அயம் (அல்லது அயமா) என்பவற்றில் இருந்து தோன்றியிருக்கவேண்டும் என்று கருதுகோள்கள் உள்ளன. இதன் பொருள் உயிருக்கு ஆதாரத்தைத் தரும் மூச்சைக் கட்டுப்படுத்தல் என்பதாம்.
பிராத்தியாகாரம் என்பது எமது ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி மனத்தை வெளியுலக சிந்தனையில் இருந்து விலக்கிக் கொள்ளுதல். பிராணாயாமம், பிராத்தியாகாரம் இரண்டும் சேர்த்து அந்தரங்க சாதனா எனப்படுகின்றது.
தாரணை என்பது மனத்தை ஒரு நிலைப்படுத்தி சிந்தனை சிதறாமல் காத்தல். இதன் மூலம் நினைவாற்றல் வலிமைப்படுகின்றது. பிராத்தியாகாரம் மூலம் புலன்கள் அடக்கப்பட தாரணையை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
தியானம் என்பது சிந்தனையற்றநிலை. தாரணை, தியானம், சமாதி ஆகிய மூன்றும் யோகி ஒருவர் தனது ஆன்மாவை உள்நோக்குவதை ஏற்படுத்துகின்றது. இந்த நிலையில் கடவுளைச் சந்திக்க எங்கும் போகத்தேவையில்லை. தன் உள்ளே அந்தராத்மாவாக உள்ளத்தைக் கடந்து கடவுள் உள்ளார் என்பதை சமாதி நிலையில் யோகி உணர்வார். இந்த மூன்று படிகளும் அந்தராத்மா சாதனா எனப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here