சிறுதானியங்கள் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம்!

0
291
“உணவிலிருந்து தொடங்குவதுதான் ஆரோக்கியம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உணவென்பது மருந்தாக இருக்கிறதா என்றால், சந்தேகமே!
நமது முன்னோர்கள் சிறுதானிய உணவுகளை அதிகம் உட்கொண்டதனால் தான் 80, 100 வயது வரை வாழ்ந்தார்கள்.
சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு சமீபமாய் அதிகரித்து வரும் பாங்கு நம்பிக்கைக்குரிய விஷயம்.
இருப்பினும் அதை சமைக்கும் முறைகள் பலருக்கு தெரியாததால் வாங்கி வைத்த வரகும், சாமையும் அடுப்படி ஷெல்ஃபில் இன்னும் சில வீடுகளில் தூங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.
சமைக்கும் முறை
சாமை, வரகு, குதிரவாலி, தினை (Husked Grains) ஆகியவை நெல் அரிசியைப் போன்ற தன்மை உடையது. அரிசியை சமைத்து உபயோகப்படுத்தும் அதேமுறையில் பயன்படுத்த முடியும். இவற்றை சமைப்பதற்கு முன், 15 நிமிடங்கள் நீரில் ஊறவைக்க வேண்டும்.
சமயத்தில் கல், மண் இருந்தால் நீக்கிக் கொள்ளவும். எலுமிச்சை, புதினா, புளியோதரை, தேங்காய், தக்காளி என அனைத்து “கலந்த சாதங்களையும்“ இவற்றில் செய்ய முடியும். தோசை, சப்பாத்தி, அடை செய்வதற்கு ராகி, கம்பு, சோளம் (De- Husked Grains) ஏற்றவை.
நாம் சாதாரணமாக அரைக்கும் (நெல் அரிசியிலான) இட்லி தோசை மாவுடனும், பிசையும் (கோதுமையிலான) சப்பாத்தி மாவுடனும், எந்த சிறுதானிய மாவையும் வேண்டிய அளவு சேர்த்துக்கொள்ளலாம்.
உடலுக்குத் தேவையான சக்தியை கொடுப்பதிலும், வைட்டமின், மினரல் போன்ற நுண் ஊட்டச்சத்தை வாரி வழங்குவதில் அரிசியை விட சிறந்தவை.
சிறு தானிய சாதம்
ஒரு கப் சாமை (அ) வரகு (அ) தினை (அ) குதிரைவாலி தானியத்தை தண்ணீரால் சுத்தம் செய்து கல், மண்ணை நீக்கி விடவும். இரண்டரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சுத்தம் செய்த தானியங்களை சேர்த்து 10 நிமிடங்கள் சிம்மில் கொதிக்க விடவும்.
அடுப்பை அணைத்து பாத்திரத்தை 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். நன்றாக குழைந்த சாதம் வேண்டும் எனில், ப்ரெஷர் குக்கரிலும் இரண்டு விசில் வரை வைத்து சமைக்கலாம். சாதாரண அரிசி சாதம் போலவே, இதனை சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோர் என அனைத்துமே சேர்த்து உண்ணலாம்.