ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

0
337

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ள எடப்பாடி அரசு

 பதவி விலக வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கும் மண்ணுக்கும் கேடு விளைவித்து வரும் நாசகர ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பல நாட்களாகப் போராடி வருகின்றனர்.

நாசகர ஸ்டெர்லைட் ஆலையால் குடிநீர் மாசு ஏற்பட்டு விவசாயம் அழிந்து வருகின்றது. மேலும் குழந்தைகள் , பெரியவர்கள் உள்ளிட்டோருக்கு மூச்சுத் திணறல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டுவருவதால் இந்தப் போராட்டம் மிகவும் வீரியமாகவும், ஜனநாயக ரீதியாகவும் 100 நாட்கள் நடத்து வந்துள்ளது.

தொடர்ச்சியாக மக்கள் போராடினாலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குப் பதிலாக தமிழக அரசு நாசகர ஆலைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவுள்ளதாக ஸ்டெர்லைட்  எதிர்ப்பு போராட்டக் குழு அறிவித்திருந்தது. இதன் பிறகு இந்தப் போராட்டத்தை கவன ஈர்ப்பு போராட்டமாக மாற்றக் காவல்துறை கோரிக்கை விடுத்த நிலையில் அதனையும் போராட்டக் குழுவினர் ஏற்றுக் கொண்டனர். இந்தச் சூழலில் போராட்டக் குழுவினரை நேற்று முதல் தொடர்ச்சியாக காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்தனர். நள்ளிரவிலும் பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஒத்துமொத்தமாக தூத்துக்குடி மாவட்ட மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள் என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் இன்று தூத்துக்குடி, ஶ்ரீவைகுண்டம் பகுதியில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. குடும்பத்தினருடன் தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இன்று காலையில் அமைதியாகப் பேரணியாக சென்ற பொது மக்கள் மீது  காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்தி துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர்.

பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோரை ஓட,ஓட விரட்டி காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். . இந்தப் போராட்டத்தில் காவல்துறையினரின் கொடூர தாக்குதலில் மூவர் பலியாகி உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது,

தங்களுக்காகவும், தங்களது எதிர்கால சந்ததிக்காகவும் ஜனநாயக ரீதியில் போராடிய மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைக் காவல்துறை நடத்தியுள்ளது அப்பட்டமான மனிதஉரிமை மீறிய செயலாகும்.

காவல்துறையினர் இந்தத் தாக்குதலையும்,  அதனை மௌனமாக வேடிக்கை பார்த்துவரும் எடப்பாடி அரசு  மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென கோருகிறோம்.

இந்தத் தாக்குதலில் ஈட்டுப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தும், இத்தாக்குதலில் பலியானவர் குடும்பத்தினருக்கு தலா ரூ ஒரு கோடியும் காயமடைந்தவர்களுக்கு உரியச் சிகிச்சையும், நிவாரணமும் வழங்கத்  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் பெருமுதலாளி நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலையின் எடுபிடியாகச் செயல்பட்டு போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மக்களைக் கொன்றுள்ள எடப்பாடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோருகிறேன்.

எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி