7 ஆக., 2018

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்


தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.கருணாநிதி காலமானார்.  

கடந்த மாதம் 28 ம் தேதி கருணாநிதிக்கு ஏற்பட்ட திடீர் ரத்த அழுத்த குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பிறகு அவரது உடல் சீரான நிலைக்கு மாறியது. கருணாநிதியின் உடல் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தது.

29 ம் தேதி கருணாநிதியின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாகவும் பிறகு சரி செய்து விட்டதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்தது.

31 ம் தேதி கருணாநிதி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 6 ம் தேதி கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. 24 மணி நேரத்திற்குப் பிறகு உடல் நிலை குறித்து அறிக்கை விடப்படும் என காவேரி மருத்துவமனை தெரிவித்தது.

இன்று மாலை 4.30 மணியளவில் கருணாநிதி உடல் நிலை மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் முக்கிய உறுப்புகளை செயல் பட வைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து செய்திகள் பரவியதும் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் காவேரி மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கண்ணீர் விட்டு கதறினார். வா வா தலைவா, எழுந்து வா தலைவா என கோஷங்கள் எழுப்பப்பட்டது.

குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா நடிகர்கள் என மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்து சென்றனர்.

11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.