அடர்ந்த காட்டில் அழகிய டாப்சிலிப் காட்டினை ரசிக்கலாமா?

0
491

ஆனைமலையில் உள்ள டாப்சிலிப் தனித்துவம் வாய்ந்த இடம். காரணம், இது ஓர் அடர்ந்த காடு. இந்திரா காந்தி வன விலங்குகள் சரணாலயம்தான் டாப் சிலிப் என அழைக்கப்படுகிறது.

இங்குள்ள வளர்ப்பு யானைகள் முகாம் பிரசித்தி பெற்றது. மலையில் ஏறும்போதே இருபுறமும் அடர்ந்த மூங்கில்கள் சாலைக்குக்குடை பிடிக்கும். காற்றில் மூங்கில்கள் உராயும் சத்தம், சட்டென்று அடர்ந்த கானகத்தில் புகுந்த சூழ்நிலையை உண்டாக்குகிறது.

டாப் சிலிப்பில் இருப்பது ஒரே சாலைதான். அது, கேரள எல்லைக்குள் அமைந்திருக்கும் பரம்பிக்குளம் அணை வரை செல்கிறது. அடர்ந்த காட்டுப் பகுதியையும், இயற்கையான சூழலையும் கண்கள் சலிக்கும் அளவுக்கு அனுபவிக்கலாம்.

வனப் பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை போன்ற விலங்கு இனங்களும், அபூர்வமான பறவை இனங்களும் இருக்கின்றன. இயற்கை ஆர்வலர்களுக்கும் இயற்கைச் சூழலில் தங்கிச் செல்ல விரும்புபவர்களுக்கும் ஏற்ற இடம் இது.

முழுக்க முழுக்க தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் டாப் சிலிப்பில், தனியாருக்குச் சொந்தமான நிலம் எதுவும் இல்லை. அதனால், தனியார் விடுதியோ, கடைகளோ கிடையாது.

ஒரே ஒரு உணவு விடுதி, ஆரம்பச் சுகாதார நிலையம், வன விலங்கு மியூசியம், வனத் துறை பணியாளர்கள் தங்கும் குடியிருப்புகள் ஆகியவை மட்டுமே இங்கே உண்டு.

பரம்பிக்குளம் கேரள மாநிலத்தில் இருக்கும் பரம்பிக்குளம் அணைக்குச் செல்ல, டாப் சிலிப்பில் இருந்து 23 கி.மீ. தூரம். ஆனால், கேரள வனத்துறையின் அனுமதி வாங்கிய பின்னரே அணையைக் காணச்
செல்ல முடியும்.

நாள் ஒன்றுக்கு சுமார் 30 வாகனங்களை மட்டுமே அனுமதிப்பார்கள். இந்தியாவில் உள்ள முக்கிய சூழியல் இடங்களில் ஒன்று பரம்பிக்குளம். பொள்ளாச்சி – டாப்சிலிப் 35 கி.மீ. கோவை – டாப்சிலிப் 75 கி.மீ.

வனத் துறையினர், யானை மீது சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு காட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள். இந்தப் பயணம் சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும். இங்குள்ள யானைகள் முகாமில் இருபதுக்கும் மேற்பட்ட யானைகள் இருக்கின்றன.

சஃபாரி அழைத்துச் செல்ல இதில் சில யானைகளைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள். யானையில் செல்லும்போது மிருகங்களைக் காணும் வாய்ப்பு சில சமயம் கிடைக்கும்.