in

உலகையே உலுக்கிய நவம்பர் புரட்சி பற்றி உங்களுக்கு தெரியுமா?

நவம்பர் புரட்சி, அக்டோபர் புரட்சி (October revolution) எனவும் அறியப்படும். 1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் பெட்றோகிராட்டில் (தற்போது லெனின்கிராட்) ஏற்பட்ட ரஷ்யப் புரட்சியாகும்.

இப்புரட்சி, நவம்பர் 7, 1917 (பழைய ஜலியன் நாட்காட்டியின் படி 1917 அக்டோபர் 25) இல் விளாடிமிர் லெனின் மற்றும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நிகழ்ந்த பொதுவுடைமைப் புரட்சியாகும். இந்தப் புரட்சி, ரஷ்ய இடைக்கால அரசாங்கத்தை வீழ்த்தியது.

இதன் பின்னர் 1918-1920 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து, 1922 இல் சோவியத் ஒன்றியம் உருவானது. தொடக்க காலங்களில் இது அக்டோபர் எழுச்சி அல்லது 25 ஆம் நாள் எழுச்சி என்று குறிப்பிடப்பட்டது. லெனினின் எழுத்துக்களின் முழுமையான தொகுப்பின் முதல் பதிப்பு உட்பட்ட ஆவணங்களில் இவ்வாறே உள்ளது.

காலப்போக்கில் அக்டோபர் புரட்சி பெரும் உலகளாவிய முக்கியத்துவம் உடைய நிகழ்வாகக் கருதப்பட்டது. சோவியத் யூனியன் தகர்ந்த பிறகும் இன்றும் அது உலகிலுள்ள அனைத்து புரட்சிகர எண்ணம் கொண்டோருக்கும், ஒவ்வொரு கம்யூனிஸ்டு கட்சிக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது.

நவம்பர் புரட்சிக்குப் பின் நிகழ்ந்த அற்புதங்கள் ரஷ்யாவில் நடந்த அந்த அற்புதம் கடையனுக்கும் கடைத் தேற்றம் சாத்தியம் என்பதை நிரூபித்துக் காட்டிற்று.

விதி வலியது; வாழ்க்கை வசந்தமா? கசந்ததா? என்பதை விதிப்பயனும், வினைப்பயனும் மட்டுமே தீர்மானிக்கும் என்று எண்ணியிருந்தோருக்கு எல்லோருக்கும் வசந்தம் எனும் விதியை உருவாக்க முடியும் என்கிற உண்மையை உணர்த்தியது.

20ம் நூற்றாண்டில் காலனி ஆதிக்க கால நடைமுறைகளுக்கும், ஏகாதிபத்திய சக்திகளின் நேரடி காலனி ஆதிக்க முறைக்கும் நவம்பர் புரட்சி உலகின் பல்வேறு பகுதிகளில் முடிவு கட்டியது. காலனி நாடுகளை விடுதலை அடைய உத்வேகமும் விடுதலை பெற்று நாடுகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது.

வெகுமக்களுக்கு கல்வி கல்லாமை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, உணவுக்கான உத்தரவாதம், சுகாதாரம், முழு வேலைவாய்ப்பு, வேலையில்லாத் திண்டாட்டத்தை இல்லாமல் ஒழித்தது, பெண்களுக்கு சம உரிமை சுகாதாரம், வீட்டுவசதி போன்ற துறைகளில் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்தது என அனைத்துத் துறைகளிலும் ஜனநாயகப்பூர்வ, சமூக மாற்றத்திற்கு வழிவகுத்தது.

வேலை நேரம் 7 மணி நேரமாக்கப்பட்டது. சுரங்கம் போன்ற கடினப் பணிகள், எப்போதும் தயாராக இருக்க வேண்டிய மருத்துவப் பணிகள் செய்வோருக்கு வேலை நேரம் 6 மணி நேரம் மட்டுமே. தவிர்க்க முடியாதிருந்தால் தவிர கூடுதல் நேரப்பணி தடை செய்யப்பட்டிருந்தது.

வருடத்தில் ஒரு மாத காலம் முழுச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை (இதர விடுமுறைகள் தவிர்த்து) உண்டு. அக்காலத்தில் ஓய்விடங்களில் மானியத்துடன்கூடிய உல்லாச குடில்களில் தொழிலாளர்கள் தங்கும் உரிமை படைத்திருந்தனர்.

ஆண்கள் 60 வயதிலும், பெண்கள் 55 வயதிலும் ஓய்வு பெற்றனர். ஓய்வு பெற்றோருக்கும் உழைக்க வாய்ப்பற்றோருக்கும் ஓய்வூதியமாக முழுச்சம்பளம் வழங்கப்பட்டது.

பெண் உரிமைகள் : அனைத்து நிலைகளிலும் பாலின சமத்துவம் நிலைநிறுத்தப்பட்டது. உழைக்கும் பெண்களுக்கு நான்கு மாதம் மகப்பேறு விடுப்பு முழுச்சம்பளத்துடன் அளிக்கப்பட்டது. மகப்பேறு முடிந்த பிறகு குழந்தைக்கு ஓராண்டு முடியும் வரையில் பாதிச் சம்பளத்துடன் விடுப்பெடுத்து கொள்ள முடியும்.

கர்ப்பிணிகள், கைக்குழந்தை உள்ளோருக்கு 7 மணி நேரம் என்பதும் 6 நாள் வேலை என்பதும் கட்டாயமல்ல. குழந்தை பராமரிப்பிற்காக ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தொகை மானியமாக அளிக்கப்பட்டது. ஆரம்ப த்தில் நான்காவது குழந்தைக்கும் அதற்குப் பின்னருமே அளிக்கப்பட்டது.

ஆனால் பிற்காலத்தில் முதற் குழந்தை முதலே இந்த மானியம் அளிக்கப்பட்டது. தனியாக வாழும் பெண்களின் குழந்தைகளுக்கு இந்த மானியம் 18 வயதாகும் வரை (மற்றவர்களுக்கு 16 வயது வரை) வழங்கப்பட்டது.

பாலூட்டும் தாய்மார்கள் குழந்தை பால்குடி மறக்கும் காலம் வரை வழக்கமான பணியிடை, ஓய்வுகளோடு கூடுதலாக இரண்டு அரை மணிநேர ஓய்வுகளுக்கு உரிமை படைத்தவர்களாக இருந்தார்கள்.

கல்வி பெறும் உரிமை அடிப்படை உரிமையாக்கப்பட்டிருந்தது. இதை முழுமை பெறச் செய்ய அனைத்து நிலைகளிலும் கல்வி இலவசமாக்கப்பட்டிருந்தது. மேல்நிலைக் கல்வி வரை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்பட்டன.

சுய கல்வியும், தாய்மொழிக் கல்வியும் உத்தரவாதப்படுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே கல்வியறிவற்றவர்களே இல்லாத முதல் நாடு என்ற பெருமையை பெற்றது. அரசு நிறுவனங்களின் மூலம் தரமான இலவச மருத்துவம் அனைவருக்கும் அளிக்கப்பட்டது.

உள்நோயாளியாக இருந்தாலும் நிபுணர்களின் சிகிச்சை தேவைப்பட்டாலும் அவர்கள் அந்த நாட்டு நாணயமான கோபெக்கில் ஒன்றைக் கூட செலவழிக்க
வேண்டியதில்லை என்ற நிலை. சேவியத் யூனியனில் அனைவருக்கும் வீட்டுவசதி அளிக்கப்பட்டிருந்தது.

1977ல் இது அரசியல் சட்ட உரிமையாக்கப்பட்டிருந்தது. மாத ஊதியத்தில் 3 முதல் 4 சதவீதம் மட்டுமே வீட்டு வாடகைக்கு கட்டணமாக வசூலிக்கப்பட்டது. வீட்டு வாடகை, மின்சாரம், தண்ணீர், வெந்நீர், எரிவாயு அனைத்திற்குமான செலவுத்தொகை இது.

1980களில் இறுதிப்பகுதியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சகல வசதிகளும் நிறைந்த தனிக் குடித்தனப் பகுதி என்பது அடுத்த பத்தாண்டுகளுக்கான அவர்களின் நோக்கமாக இருந்தது. மிக விரிவான பொதுப் போக்குவரத்து வசதிகளை சோவியத் அரசு ஏற்படுத்தியிருந்தது.

1930 முதல் 1970 வரையில் போக்குவரத்து கட்டணங்கள் மாற்றப்படவில்லை. இத்தனைக்கும் மிகக் குறைந்த கட்டணமே பொதுப்போக்குவரத்திற்கு
நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 1952ல் தான் சோவியத் யூனியன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தது. சோவியத் யூனியன் இருந்த வரை அந்த நாடு ஒரு போட்டியில் பங்கேற்கவில்லை.

பங்கேற்ற 9 போட்டிகளில் அது 7 போட்டிகளில் மெடல் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்தது. இரண்டு போட்டிகளில் இரண்டாமிடத்தில் இருந்தது. இரண்டாம் உலகப்போரின்போது இரண்டு கோடி மக்களை களப்பலி ஆக்கி பாசிச பேரபாயத்திலிருந்து பூவுலகை காத்தது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றை சோசலிச நாடுகளாக உருவாக்குவதிலும் சோவியத் யூனியன் தீர்மானகரமான பங்களிப்பு ஆற்றியது. சீனப் புரட்சியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி, வீரஞ்செறிந்த வியட்நாம் மக்களின் போராட்டம், கொரிய மக்களின் போராட்டம், கியூபா புரட்சியின் மகத்தான வெற்றி ஆகிய அனைத்தும் உல கின் வளர்ச்சிப் போக்குகளில் அபரிமிதமான பங்காற்றியது.

ஒரு அற்புதத்தை நிகழ்த்திய நாள். உலகில் பசியற்ற முதல்நாட்டையும், எழுத்தறிவற்றவர்களே இல்லாத முதல் நாட்டையும் அது உலகிற்கு அளித்தது. 1917ல் புரட்சி நடந்த போது இருந்த உற்பத்தியை எட்ட அதற்கு 11 ஆண்டுகள் பிடித்தது.

உள்நாட்டு சதிகள், அந்நிய நாடுகள் சுற்றி வளைப்பு என்று திணறிக் கொண்டிருந்த காலம். உலகில் எந்த நாட்டிலும் பரிசோதிக்கப்படாத ஆளும் வர்க்கங்களாலும், மத அமைப்புகளாலும் சபிக்கப்பட்ட பாதையில் அவர்கள் பயணித்தார்கள்.

சுருக்கமாய் சொல்தென்றால் மனித சக்திக்கும் அப்பாற்பட்டதாக புனையப்பட்ட சொர்க்கத்தை மனித சக்தியால் படைத்தளித்தது சோசலிசம். மனிதனை மனிதன்

சுரண்டுவது என்ற மனிதாபிமானமற்ற முறைக்கு முடிவு கட்டியது சோசலிசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *