in

பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் வரலாறு

சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூரில் உள்ள வசிஷ்டா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இக்கோவில். நான்கு யுகங்களுக்கு முன்பு சிவபெருமான் சுயம்புலிங்கமாக தோன்றினார். ஆதலால் இக்கோவில் “தான்தோன்றி நாதர்” என்னும் திருப்பெயருடன் விளங்குகிறது.

வசிஷ்ட முனிவர் வேள்வி புரிந்ததால் இந் நகர் வேள்வியூர் என பெயர் பெற்றது. தற்போது பேளூர் என்று விளங்குகிறது.

வசிஷ்டர் உலக நலனுக்காக தவம் செய்ய முன்வந்தார். அப்போது குபேரன், தாமரை பீடத்தில் எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி பொன் மாரி பொழிந்தார். இதனை நினைவுறுத்தும் வகையில், தாமரையில் எழுந்தருளியுள்ள குபேரலிங்கத்தை ஆலயத்தில் தரிசிக்கலாம்.

வசிஷ்ட முனிவர் யாகம் செய்த இடம் “யாகமேடு” என்று அழைக்கப்படுகிறது. அங்கு கிடைக்கும் மண்ணை கோவிலில் விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இந்த ஆலயத்தில் சுயம்புலிங்கமாக தோன்றிய “தான்தோன்றிநாதர்” கிழக்கு திசையை நோக்கி காட்சியளிக்கிறார். இவரை வணங்கினால் கல்வி, செல்வம், உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஆண்டுதோறும் சித்திரை 3-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை, சூரியன் தனது ஒளிக்கதிர்களால் மூலவரை வழிபடுவது சிறப்புக்குரியது. இக்கோவிலில் இடது பக்கம் உள்ள தூணில் மூன்று கால்களைக் கொண்ட பிருங்க முனிவர் சிலை உள்ளது.

பிருங்க முனிவர் பார்வதி தேவியை உதாசீனப்படுத்தி சிவபெருமானை மட்டும் வழிபட்டு வந்தார். இதனால் கடும் கோபம் அடைந்த சிவசக்தி பிருங்க முனிவர் கால்களை வலுவிழக்க செய்து நடக்க முடியாமல் ஆக்கினார். அப்போது பிருங்க முனிவர் இறைவனை வேண்டிக் கொண்டதால் “கைலாய நாதர்” அம்முனிவருக்கு மூன்றாவது காலை கொடுத்து நடக்க செய்தார் என்பது புராணக்கதை.

சித்தி விநாயகர் இடது பக்கத்தில் இரட்டை பிள்ளையார் சன்னதி உள்ளது. இரட்டைப் பிள்ளையாரை சன்னிதியில் வேண்டிக்கொண்டால் 90 நாட்களில் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும் என்று நம்புகின்றனர்.

திருமணத்திற்கு முன்பு வலம்புரி பிள்ளையாருக்கு ஒரு மாலையும், திருமணம் முடிந்த பிறகு இரட்டை பிள்ளையாருக்கு 2 மாலைகளை அணிவித்து நமது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்.

இக்கோவிலில் 23 நாக மூர்த்தியின் சிலைகளும், ஆயிரம் லிங்கங்கள் கொண்ட ஆயிர லிங்க சந்நிதியும் அமைந்துள்ளது. நேர் எதிரே குருபகவான், தட்சிணாமூர்த்தி சந்நிதியும் உள்ளது.

இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அம்மனுக்கு “அற ம்வளர்த்த நாயகி” என்று பெயர். திருமணத்தடையை கத்தரி தோஷம் என்று கூறுவார்கள்.

தோஷம் நீங்கி திருமணம் நடைபெற இந்த அம்மன் சன்னதியில் ரவிக்கைத்துணி, தாலி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து அர்ச்சனை செய்வார்கள்.

இக்கோவிலில் நவக்கிரகங்கள் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் சனிபகவான் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் சிலையை நம்மால் காணமுடியும்.

இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந் திருக்கும்.

இக்கோவில் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் பேளூர் ஈஸ்வரன் கோவில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *