83 திரை விமர்சனம்
கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா உலக அளவில் தவிர்க்க முடியாத ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கிரிக்கெட்டின் மையப்புள்ளியாக இந்தியா மாறியது எப்படி? கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து எப்படி தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது? என்பதை விரிவாகச் சொல்லும் படம்தான் 83.

1975 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக களம் இறங்கி வேட்டையாடிய இந்திய கிரிக்கெட் அணி 1983ஆம் ஆண்டு யாருமே எதிர்பார்க்காத வண்ணம் உலகக் கோப்பையை கைப்பற்றிய கதைதான் 83.
இந்திய அணியின் கேப்டன் கபில்தேவாக ரன்வீர் சிங், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக தமிழ் நடிகர் ஜீவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபிகா படுகோன், கபில்தேவ் மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் விவியன் ரிச்சர்ட்ஸ், Lloyd உள்ளிட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கான நடிகர்களையும் மிகப்பொருத்தமாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளனர்.
இங்கிலாந்து பயணம் செய்தபோது, இந்திய அணியின் மீதான ஆங்கில பத்திரிகைகளின் பார்வை, அந்த செய்திகளை கபில்தேவ் கையாண்ட விதம் என அனைத்தையும் உணர்வுப்பூர்வமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் கபீர் கான்.
இந்திய அணியின் வெற்றியை ராணுவ வீரர்கள் முதல் ஊர் மக்கள் வரை கொண்டாடித் தீர்த்தக் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன.
ஒளிப்பதிவு படத்திற்கு மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. திரையரங்கில் அமர்ந்து 3 மணி நேரத்திற்குள் ஒரு முழு உலகக் கோப்பை தொடரை பார்ப்பது போல உணர்வு ஏற்படுகிறது .
முழுக்க முழுக்க கபில்தேவ் என்ற ஒரு வீரரின் விடாமுயற்சியாலும், நம்பிக்கையாலும் வென்று எடுக்கப்பட்ட இந்த உலகக் கோப்பையை ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் விதமாக 83 என்கின்ற இந்த படம் தேசப்பற்றை மிக ஆழமாக பதிய வைக்கிறது.
