ஆதார் திரை விமர்சனம்
இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கருணாஸ், அருண் பாண்டியன், ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஆதார். ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
கட்டிடத் தொழிலாளியாக இருக்கும் கருணாசுக்கும் அவரின் மனைவி ரித்விகாவுக்கும் குழந்தை பிறக்கிறது. இந்நிலையில் இவர்களுக்கு துணையாக இருந்த இனியா திடீரென காணாமல் போகிறார். அதன் பிறகு அவரின் சடலம் மட்டும் கிடைக்கிறது.
இதனை தொடர்ந்து கருணாஸின் மனைவியும் காணாமல் போகிறார். இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் கருணாஸிற்கு ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. இறுதியில் கருணாஸின் மனைவி என்ன ஆனார்? இனியாவின் மரணத்திற்கு யார் காரணம் என்பது தான் படத்தின் மீது கதை.

கார்ப்பரேட்களின் சூழ்ச்சியில், எளிய மனிதர்களின் உயிர்கள் எப்போதும் விளையாட்டுக் கருவிதான் என்பதையும் பணத்துக்கும் அதிகாரத்துக்கும் இடையில் சாதாரண மனிதனின் நீதி எப்படி தள்ளாடுகிறது என்பதையும் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார்.
கட்டிடத் தொழிலாளியாக வரும் கருணாஸ் நடிப்பில் அசத்தியுள்ளார். கர்ப்பிணியான ரித்விகாவுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் அவரைச் சுற்றிதான் கதை நகர்கிறது.
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது. படத்தில் உள்ள பிற நடிகர்களும் தங்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இரண்டு மணி நேரப் படம் என்றாலும் படம் மெதுவாகத்தான் செல்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் ஆதார் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
