பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவால் மரணம்

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.

கொரோனா தொற்று காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பலனளிக்காமல் போனதால் இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. 74 வயதான இவருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

நடிகர் பாண்டு 1981 ல் வெளிவந்த கரையெல்லாம் செண்பகப்பூ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சின்னத் தம்பி’, ‘திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’ ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

பல திரைப்படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை வடிவமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், இயக்குனர் கே.வி ஆனந்த் உயிரிழந்த நிலையில் தற்போது நடிகர் பாண்டுவும் உயிரிழந்திருப்பது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.