தல வரலாறு
நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்த வில்வமங்கள சாமியார் என்பவரிடம், பூஜை நடக்கும் நேரங்களில் பகவானே ஒரு சிறுவன் வடிவில் வந்து சாமியாருக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.
பூஜைக்கு வைத்திருக்கும் பூக்களை வீணடிப்பது பூஜைக்குரிய பாத்திரங்களில் சிறுநீர் கழிப்பதும் என பல இன்னல்கள் கொடுத்து அவரது சகிப்புத் தன்மையை பரிசோதித்து பார்த்தார் பகவான் கிருஷ்ணர்.
ஒருநாள் சிறுவனின் தொந்தரவை சகிக்க முடியாமல் உரத்த குரலில் என்னை தொந்தரவு செய்யாதே என சொல்லி பிடித்து தள்ளினார். கிருஷ்ணர் கோபத்துடன் அவர் முன் தோன்றி “பக்திக்கும், துறவுக்கும் பொறுமை மிகவும் தேவை அது உன்னிடத்தில் உள்ளதா என சோதிக்கவே இவ்வாறு நடந்தேன் எனக்கூறி, இனி நீ என்னை காண வேண்டுமானால் ஆனந்தன் காட்டிற்கு தான் வரவேண்டும் என சொல்லி மறைந்து விட்டார்.
தன் தவறை உணர்ந்த சாமியார், அனந்தன் காடு எங்கிருக்கிறது என்று தேட புறப்பட்டார். பலநாள் திரிந்தும் பலரிடம் கேட்டும் அனந்தன் காடு எங்கிருக்கிறது என தெரியவில்லை. இருந்தும் மாயக் கண்ணனை தரிசிப்பதற்காக மனம் தளராது மீண்டும்- மீண்டும் அந்த காட்டை தேடினார்.
அப்போது ஒரு நாள் வெயிலில் நடந்து சோர்ந்த நிலையில் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார், அப்போது பக்கத்தில் குடிசை வீட்டில் கணவன் மனைவிக்கிடையே சண்டை நடந்துகொண்டிருந்தது கணவன், மனைவியிடம் உன்னை அடித்து கொன்று அனந்தன் காட்டில் கொண்டு எறிந்து விடுவேன் என மிரட்டினார்,
சாமியாரின் செவிகளில் அடர்ந்த காடு என விழுந்தவுடன் அந்தக் குடிசைக்குள் சென்று அந்த கணவன் மனைவி இடையே சமாதானம் செய்து காட்டுக்கு வழி கேட்டார். அந்த வாலிபனும் கல்லும் முள்ளும் நிறைந்த ஒரு வழியை காட்டினார். பகவானை காணும் ஆவலில் அவற்றை கடந்து சென்று பகவானை கண்டார். ஆனால் அங்கு அவர் உண்ணி கண்ணனாக இருக்கவில்லை. இலுப்பை மரத்தின் அடியில் பூமாதேவி மற்றும் லட்சுமியுடன் அனந்தன் என்ற பாம்பு மீது பள்ளி கொண்டிருப்பதை தரிசித்த சாமியார் மிகுந்த மகிழ்ச்சியுடன் வணங்கினார். மீண்டும் சோதிப்பதற்காக தனக்கு பசி எடுப்பதாக கூறினார் பகவான்.
உடனே, காட்டில் கிடைத்த மாங்காயில் உப்பு சேர்த்து தேங்காய் சிரட்டையில் வைத்து கொடுத்தார். பின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் தெரிவிக்கவே, கோயில் கட்ட ஏற்பாடு செய்தார் மன்னர். அனந்தன் பாம்பு மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பத்மநாபஸ்வாமி என்ற திருநாமமும் சூட்டப்பட்டது.
முற்காலத்தில் இலுப்பை மரத்திலான மூலவர் விக்கிரகம் 1686 தீப்பிடித்தது பின் கடு சர்க்கரை யோகம் எனும் கலவையால் 12 ஆயிரம் சாளக்கிராம கற்களை இணைத்து புதிய சிலை உருவாக்கப்பட்டது. இது ஒரு அபூர்வ சிலையாகும் இதையே நாம் இப்போது தரிசனம் செய்கிறோம் இச்சிலை 18 அடி நீளம் உடையது.
உடல் முழுவதும் தங்கத்தகட்டால் பொதியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள ஹனுமான் சன்னதியில் ஹனுமானுக்கு சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும், எந்த வெயில் காலத்திலும் உருகுவதுமில்லை கெட்டுப் போவதும் இல்லை என கூறப்படுகிறது.