புதினா இலைகள் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், நார்ப்பொருள், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், மாங்கனீஸ், மாக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. இவை செரிமானம், நோய் எதிர்ப்பு, வலி நிவாரணம், சருமம், வாய்ப்பராமரிப்பு, மனநிலை மற்றும் உடல் எடை கட்டுப்பாடு போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
இந்த பதிவில் காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம்.
செரிமான சக்தி அதிகரிப்பு
காலையில் புதினா சாறு குடிப்பதால் வயிற்றில் உள்ள வாயு பிரச்சனைகள், அஜீரணம், வீக்கம் போன்றவை குறைந்து செரிமானம் மேம்படும். இது வயிற்று ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
புதினாவில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, பலவிதமான தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கும்.
வாய் துர்நாற்றம் நீக்கம்
புதினாவின் மெந்தோல் இயற்கையான குளிர்ச்சியுடன் வாயில் உள்ள துர்நாற்றத்தை நீக்கி, வாய்க்கு புத்துணர்ச்சி தருகிறது.
உடல் எடை கட்டுப்பாடு
புதினா சாறு குறைந்த கலோரிகள் கொண்டதால், உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் செரிமானத்தை மேம்படுத்தி கொழுப்பை எரிக்க உதவுகிறது.
மன அழுத்தம் குறையும்
புதினாவின் வாசனை மனதுக்கு அமைதி அளித்து, மன அழுத்தத்தையும் சோர்வையும் குறைக்கும். உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
புதினா சாறு தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் – 15-20
தண்ணீர் – 1 கப்
தேன் அல்லது சர்க்கரை – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
செய்முறை:
புதினா இலைகளை தண்ணீரில் கழுவி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். இலைகளை மிக்ஸியில் போட்டு, 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
அரைத்த சாற்றை நன்கு வடிகட்டி கொள்ளவும். தேவையான அளவு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் எலுமிச்சை சாறும் சிறிது ஐஸ் சேர்த்து குடிக்கலாம்.