தமிழகத்திலும் நுழைந்தது கருப்பு பூஞ்சை தொற்று. யாரை தாக்கும்? அறிகுறிகள் என்ன?

மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது குறைந்து வரும் சூழல் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தெலுங்கானா, மபி போன்ற மாநிலங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதில் மகாராஷ்டிராவில் 52 பேர் உயிரிழந்தனர். 1,500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கருப்பு பூஞ்சை தொற்று தற்போது தமிழகத்தில் கண்டறியப்பட்டு இருக்கிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேர் கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement

யாரை தாக்கும்?

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களை அதிகம் குறி வைத்துத் தாக்குகிறது. குறிப்பாக நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அறிகுறிகள் என்ன?

கடுமையான தலைவலி, கண்களில் வீக்கம், கண்கள் சிவப்பு நிறமாக மாறுதல், திடீரென பார்வை குறைதல், சைனஸ் பிரச்சினை, மூக்கில் வலி, வாய் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கருப்பாக மாறுதல் போன்றவை அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய தவறினால் கண் பார்வை குறைபாடு, வாய், மூக்கு, தொண்டை பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகளை சாப்பிட வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.