பேய்கள் மீது வழக்கு பதிவு – குஜராத்தில் வினோதம்

பாஞ்ச்மஹல் : ‘தன்னை வேலை செய்ய விடாமல் கொலை செய்வதாக மிரட்டுகிறார்கள்’ என, விவசாயி ஒருவர் கொடுத்த புகாரில், பேய்கள் மீது குஜராத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குஜராத்தில் உள்ள பாஞ்ச்மஹல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தலைதெறிக்க ஓடி வந்தார். அவரை ஆசுவாசப்படுத்திய போலீசார் விசாரித்தனர்.’தோட்டத்தில் என்னை வேலை செய்ய விடாமல், இரண்டு பேய்கள் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கின்றன. கொலை செய்வதாகவும் மிரட்டுகின்றன’ என, அந்த நபர் கூறியுள்ளார்.

அரண்டுபோன போலீசார், ‘என்ன செய்ய வேண்டும்’ எனக் கேட்டுள்ளனர். ‘அந்த பேய்கள் மீது வழக்கு பதிவு செய்யுங்கள். அவை பயந்து ஓடிவிடும்’ என, அவர் கூறியுள்ளார். அவர் தொந்தரவு செய்யவே, வேறு வழியில்லாமல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின், அவருடைய குடும்பத்தாரை அழைத்து விசாரித்தனர்.

Advertisement

மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், 10 நாட்களாக மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது தெரியவந்தது. குடும்பத்தாருக்கு அறிவுரை கூறி, அந்த நபருக்கு ஆறுதல் கூறி, போலீசார் அனுப்பி வைத்தனர்.