Home மருத்துவ குறிப்புகள் இலவங்கப்பட்டையில் உள்ள மருத்துவ குணங்கள்

இலவங்கப்பட்டையில் உள்ள மருத்துவ குணங்கள்

ஒரு சக்தி வாய்ந்த நுண் கிருமி நாசினி. பிரியாணி, குருமா போன்ற சுவை மிகு உணவு வகைகளில் வாசனைக்காகவும், சுவைக்காகவும் இலவங்கப்பட்டை சேர்க்கப்படுகிறது. இலவங்கப்பட்டையில் மருத்துவ குணம் உள்ளதால் டூத் பேஸ்ட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இலவங்கப்பட்டை மலைப்பகுதிகளில் உள்ள மர வகையைச் சேர்ந்த தாவரமாகும். இந்த மரம் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இந்த மரத்தில் தோன்றும் பட்டை கணம் உள்ளதாகவும், நீளமாகவும், வாசனையுடன் இருக்கும்.

சித்த ஆயுர்வேத மருந்துகளில் இலவங்கப்பட்டை சேர்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் இருந்து தயாரிக்கப்படும் நறுமண எண்ணெய் இருமல் மற்றும் உடல் வலிக்கான மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

லவங்கப்பட்டை வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, சீதபேதி, இரத்த போக்கு ஆகியவற்றை குணமாக்கும் திறன் கொண்டது. மேலும் பிரசவ வலி குறைபாடு, மாதவிலக்கு பிரச்சனை, நாள்பட்ட இடுப்பு வலிகள், பல் வலி, வாதம் முதலியவற்றைக் குணப்படுத்தும்.

லவங்கப்பட்டையில் மாவுச்சத்து, புரதச்சத்து, நீர்ச்சத்து அடங்கியுள்ளது. உணவு பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றி செரிமானத்தை சீர் செய்கிறது. மாங்கனீஸ் எனும் தாது உப்பு அதிக அளவில் இருப்பதால் மூட்டு வலியை குணப்படுத்தும். எலும்புகளை பலப்படுத்தும்.

லவங்கப்பட்டையின் சூரணத்தை 75 மில்லி கிராம் முதல் 750 மில்லி கிராம் வரை கொடுப்பதால் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சேரும் கொழுப்புகள் ஆகியவை குறையும். சீதபேதியின் போது இலவங்கப்பட்டை சூரணத்தை 750 மில்லி கிராம் அளவு நெய்யுடன் குழைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

லவங்கப் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து போதிய சூட்டில் வாய் கொப்பளிக்க பல் வலி போகும். வாய் நாற்றம் விலகி பற்கள் ஆரோக்கியம் பெறும்.

லவங்கப்பட்டை சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து. முக்கியமாக உணவு உண்டபின் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. லவங்கப்பட்டை தூளை தினமும் சிறிதளவு காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். ரத்த அழுத்தம் கட்டுப்படும்.