கோமாளி திரை விமர்சனம்

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு ஆகியோர் நடித்த கலகலப்பான திரைப்படம் தான் இந்த கோமாளி.

படத்தின் கதை 80களில் தொடங்குகிறது. ஜெயம்ரவி 12-ம் வகுப்பு படிக்கும் போது சம்யுத்தா ஹெக்டேவை காதலிக்கிறார். அப்போது ஜெயம் ரவி தன் காதலை சொல்லும்போது ஏற்படும் விபத்தில் அவர் கோமாவிற்கு சென்றுவிடுகிறார்.

16 ஆண்டுகள் கோமாவில் இருந்த ஜெயம் ரவி கண் விழிக்கிறார். அதன்பின் இந்த உலகமே அவருக்கு புதிதாக மாறுகிறது. இதற்கிடையே ஜெயம் ரவியின் நெருங்கிய நண்பரான யோகி பாபு, ஜெயம் ரவியின் தங்கையை திருமணம் செய்து கொள்கிறார்.

ஜெயம் ரவியின் குடும்பம் கடனில் சிக்கித் தவிக்கிறது. அப்போது கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு நெருக்கடி தருகிறார்கள். ஜெயம் ரவியின் குடும்பத்திற்கு சொந்தமான விலைமதிப்புள்ள ஒரு சிலை இருப்பதும், அது MLA கே.எஸ் ரவிக்குமாரிடம் இருப்பதும் தெரிய வருகிறது. அதை திருடி கடனில் சிக்கித் தவிக்கும் தனது குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறார். அவருடைய இந்த எண்ணம் நிறைவேறியதா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஜெயம் ரவி படத்திற்கு படம் கதாபாத்திரங்களை மாற்றி நடிப்பவர். 16 வருடங்களாக கோமாவில் இருந்து வரும் ஜெயம் ரவி முன்னேற்றத்தைக் கண்டதை விட அதனால் என்னவெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டி நடித்திருக்கிறார். வில்லனாக வரும் கேஎஸ் ரவிக்குமார் சாதாரண ரவுடியாக இருந்து, அரசியல்வாதியாக மாறி உள்ளார்.

இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் இருவருக்கும் அதிக காட்சிகள் இல்லை. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கேலி செய்யும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அக்காட்சிகள் நீக்கப்பட்டன. யோகி பாபுவின் காமெடி ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசை படத்திற்கு பலம்.

கோமாளி – 90 கிட்ஸ் மட்டும் அல்ல. அனைவருமே பார்க்கலாம்.