லயன் சஃபாரி அனுபவம் பெறும் போது, திறந்த ஜீப்பில் அருகே வந்த சிங்கங்கள் மிகவும் அமைதியாக நடந்துகொள்கின்றன. மனிதர்களை பார்த்தும் கவலைப்படாமல் நடந்துகொள்கின்ற இந்த சிங்கங்களின் மனநிலையைப் பற்றி நீங்கள் ஒருபோதும் ஆழமாக சிந்தித்ததுண்டா?
இந்த விசாரணைக்கு பல வனவிலங்கு நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கங்களை வழங்கியுள்ளனர். இவற்றை முழுமையாக புரிந்து கொண்டால், வனவிலங்குகளைப் பற்றிய நம் பார்வை மாற்றமடையும்!
சிங்கங்களின் பார்வையில் சஃபாரி வாகனம் என்ன?
சிங்கங்கள் ஒரு ஜீப்பை தனித்தனி மனிதர்கள் என்று அல்ல; ஒரு பெரிய வாகன உருவமாக மட்டுமே உணர்கின்றன. இது அவற்றின் மூளை செயல்பாடு மற்றும் பார்வைக்கு ஏற்ப நிகழும் செயல். தன்னைவிட பெரிய உருவத்தை சிங்கம் தாக்க விரும்பாது. இது அதன் இயற்கை பாதுகாப்பு உணர்வு.
அடிக்கடி பார்த்தால் பழகிவிடுகிறதா?
சஃபாரி வாகனங்கள் அடிக்கடி வருவதால், அவற்றால் ஆபத்து இல்லை என்பதை சிங்கங்கள் அறிந்துவிட்டன. சத்தமில்லாமல் அமைதியாக ஒரே பாதையில் செல்லும் வாகனங்களை, சிங்கங்கள் சாதாரணமான ஒன்று எனப் புரிந்து கொண்டுள்ளன. ஆராய்ச்சியாளர் டாக்டர் கிரெய்க் பேக்கர் கூறுவதில், மனிதர்கள் இடையூறு செய்யாதவரை சிங்கங்கள் தாக்குவதில்லை.
மனிதர்களை சிங்கங்கள் ஏன் தவிர்க்கின்றன?
Journal of Animal Ecology-யில் வெளியான ஆய்வில், சிங்கங்கள் மனிதர்களை ஆபத்தானவர்கள் என்று புரிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக, மனிதர்களை தவிர்ப்பது தான் உயிர்வாழ்வுக்கு வழி என்பதைக் கற்றுக்கொண்டுள்ளனவாம்.
சிங்கத்தின் எதிர்வினை!
- வாகனங்கள் வேகமாக செல்கிறதா?
- சிங்கங்களின் அருகே செல்லுகிறீர்களா?
- சத்தம் அதிகமா?
இதெல்லாம் சிங்கங்களை எச்சரிக்கைக்கு தூண்டும். கைட் (Safari Guide) வழிகாட்டுதல்களை பின்பற்றினால், எந்தவொரு மோதலும் நிகழாது. சிங்கங்கள் அதிகாலையும், சூரியன் மறையும் நேரத்திலும் வேட்டைக்கு தயாராக இருக்கும். அந்த நேரங்களில் கூட அமைதியாக இருப்பதே பாதுகாப்பு.
சிங்கங்கள் தாக்கும் அபாயங்கள் இருக்கிறதா?
சிங்கங்கள் சாதாரணமாக தாக்குவதில்லை. ஆனால் தங்களை தொந்தரவு செய்தால், முதலில் எச்சரிக்கையாக கர்ஜனை எழுப்பும். அதையும் விட்டுவிட்டு அவர்கள் மீது நெருக்கமாக சென்றால் தாக்கலாம்.
2022-இல், உலகளவில் மனித மரணத்திற்குக் காரணமான விலங்குகளில்,
- 1வது இடம் – கொசுக்கள்
- 2வது இடம் – பாம்புகள்
- 3வது இடம் – நாய்கள்
- 12வது இடம் – சிங்கங்கள்!
முக்கியம்: கடந்த மாதம் நமீபியாவில் ஒரு தொழிலதிபர் காரில் தங்கி இருந்தபோது சிங்கத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இரவில் கூடாரத்திலிருந்து வெளியே வந்ததுதான் அதற்குக் காரணம்.
லயன் சஃபாரி செல்லும் பயணிகள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்
- சிங்கங்களின் அருகே இரக்கம் காட்டுங்கள்
- சத்தம் செய்ய வேண்டாம்
- கைட் கூறும் வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்
- வாகனத்தில் இருந்து இறங்க வேண்டாம்
- புகைப்படம் எடுக்கும் போது ஃபிளாஷ் பயன்படுத்த வேண்டாம்
சிங்கங்கள் மனிதர்களை தாக்குவதில்லை என்றால் அது நமது அணுகுமுறை காரணமாகத்தான். விலங்குகளை மதித்து, அவற்றின் எல்லைகளைக் கடக்காமல் இருந்தால், மனிதர் – வனவிலங்கு ஒத்துழைப்பு சாத்தியம்!