மாஸ் காட்டிய மோகன்லால் – த்ரிஷ்யம் 2 திரை விமர்சனம்
2013 ஆம் ஆண்டு மோகன்லால், மீனா ஆகியோர் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் இந்தியாவின் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளது.
படத்தின் முதல் காட்சியில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கையில் ஒரு மண்வெட்டியுடன் மோகன்லால் வெளியே வருகிறார். பின்னர் ஆறு வருடங்களுக்கு பிறகு கதை தொடங்குகிறது.

கொலை செய்யப்பட்டவரின் சடலம் எங்கே புதைக்கப்பட்டது? என்ற ஒரு கேள்வியை கையில் வைத்துக் கொண்டு காவல்துறையை படாதபாடுபடுகிறது. எதிர்பார்க்காத சாட்சியின் உதவியுடன் சடலம் இருக்குமிடம் கண்டறியப்படுகிறது. இதில் மாட்டிக் கொள்ளும் மோகன்லாலின் குடும்பம் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை.
முதல் பாகத்தில் மோகன்லாலுக்கு அந்த ஊர் மக்கள் ஆதரவாக இருப்பார்கள். இரண்டாம் பாகத்தில் மோகன்லால் தான் இந்த கொலையை செய்திருப்பார் என்று தீர்க்கமாக நம்பும் அளவிற்கு ஊர் மக்கள் மாறி இருப்பார்கள். படத்தின் முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி முழு வேகத்தில் செல்கிறது.
சோகம், பயம், சென்டிமென்ட் என விதவிதமான உணர்வுகளை வெளிக்காட்டி நடித்துள்ளார் மோகன்லால். தன்னை சுற்றி நடப்பதை அறிந்து பயம்கொள்ளும் மனைவி ராணி பாத்திரத்தில் மீண்டும் மீனா கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கிறார். அனில் ஜான்சனின் இசை படத்திற்கு கூடுதல் பலத்தை தருகிறது
பொதுவாக இரண்டாம் பாகத்தில் வெளிவரும் பல படங்கள் தோல்வியை தழுவுகின்றன. ஆனால் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் அப்படி இல்லை. யூகிக்க முடியாத ட்விஸ்ட்கள், நடிப்பு, திரைக்கதை என மற்றுமொரு தரமான சம்பவத்தை நிகழ்த்திக்காட்டியிருக்கிறது.