Search
Search

பிரிவினை முதல் பிரதமர் வரை – மன்மோகன் சிங்-ன் தெரியாத பக்கங்கள்

manmohan singh facts

1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவில் கா (Gah) எனும் கிராமத்தில் பிறந்தார் மன்மோகன் சிங்.

தேசப் பிரிவினைக்கு பின் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த பல லட்சம் குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று. அப்போது மன்மோகன் சிங்கிற்கு 14 வயது.

அமிர்தசரஸில் உள்ள இந்து கல்லூரி, பஞ்சாப் பல்கலைக்கழகம், பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர் கல்வி கற்ற மன்மோகன் சிங் 1962இல் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது கௌரவம் மிக்க ஆடம் ஸ்மித் பரிசை வென்றவர் மன்மோகன் சிங்.

1971இல் வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசகராக அரசுப் பணியில் சேர்ந்தார். ஒரே ஆண்டிலேயே அவருக்கு அடுத்த முக்கியப் பதவி கிடைத்தது. 1972இல் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார் மன்மோகன் சிங்.

1982 முதல் 1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் 1985 முதல் 1987 வரை திட்ட கமிஷனின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர்.

நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் இந்திய நிதி அமைச்சராக இருந்தார் மன்மோகன் சிங்

1991-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று நரசிம்மராவ் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட போது அந்நியச் செலாவணி பற்றாக்குறை போன்ற கடுமையான பொருளாதார நெருக்கடியில் இந்தியா இருந்தது.

அந்த காலகட்டத்தில் அரசியல் பதவி எதையும் வகிக்காத மன்மோகன்சிங் நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இந்திய பொருளாதார சீர்திருத்தத்தின் மூளையாக கருதப்படும் மன்மோகன் சிங், 1991-1996 ஆட்சிக் காலத்தில் நரசிம்ம ராவ் உடன் இணைந்து இந்தியாவில் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றை அமலாக்கினார்.

சிறந்த நிதி அமைச்சருக்கான ‘ஆசியா மணி அவார்ட்’ (Asia Money Award for Finance Minister of the Year) விருதை 1993, 1994 ஆகிய ஆண்டுகளிலும், ‘யூரோ மணி அவார்ட்’ (Euro Money Award for Finance Minister of the Year) விருதை 1993ஆம் ஆண்டிலும் பெற்றார் மன்மோகன் சிங்.

1987இல் இந்திய அரசின் பத்ம விபூஷண் உள்ளிட்ட பல தேசிய, சர்வதேச விருதுகளை பெற்றவர் மன்மோகன் சிங்.

manmohan singh facts

2004 தேர்தல் வெற்றிக்கு பின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பொறுப்பேற்க மறுத்தபின் மன்மோகன் சிங் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் சில தகவல்கள்

மன்மோகன் சிங்கிற்கு ஹிந்தி பேச மட்டுமே தெரியும், ஹிந்தி படிக்க தெரியாது. அவர் பதவியில் இருக்கும் போது அரசு உரைகள் எல்லாம் உருது மொழியில் இருக்கும். அதை வைத்துதான் அவர் ஹிந்தியில் பேசுவார்.

மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட மாணவர் – புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கும் பொழுது அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் குளிப்பாராம், ஏனென்றால் அவரது நீண்ட முடியை பிற மாணவர்கள் முன் அலச கூச்சப்படுவாராம். இதனை BBC பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

சிறு வயதில் தாயை இழந்தவர், அவரது பாட்டிதான் மன்மோகன் சிங்கை வளர்த்துள்ளார். கா (Gah) எனும் கிராமத்தில் அவர் வளர்ந்தார். தற்பொழுது அந்த கிராமம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது.

அவர் வளர்ந்த கிராமத்தில் 12 வருடம் மின்சாரம் இல்லாமல் அவர் எண்ணெய் விளக்கு ஒளியில் படித்துள்ளார். மேலும், அவரது பள்ளிக்கூடத்திற்கு பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று படித்துள்ளார்.

Leave a Reply

You May Also Like