படங்களை அடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வெளியாகும் ஃபர்ஹானா டீசர்!

சினிமா பின்புலம் உள்ள குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் கூட சினிமாவில் தங்களுக்கான இடத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள தொடர் முயற்சியும், ஒப்பற்ற உழைப்பும் வேண்டும் என்பதை நிரூபித்த நடிகர், நடிகைகளின் பலர் உண்டு தமிழ் சினிமா உலகில்.
அந்த வகையில் அப்பா, அம்மா, தாத்தா மற்றும் பாட்டி என்று பலர் சினிமா துறையில் இருந்த பொழுதும் ஒரு நடுத்தர குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து சிறு, சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, சின்னத்திரை ஷோக்களில் தொகுப்பாளினியாக இருந்து இன்று ஒரு நல்ல நடிகையாக உயர்ந்துள்ளவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.
2012ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இவர் நடித்த மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கை எட்டு. ஆனால் இந்த 2023ம் ஆண்டில் இவர் நடிப்பில் உருவாகி வரும் மொத்த படங்களின் எண்ணிக்கை 7. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் 12க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தற்போது கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ஃபர்ஹானா திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க Dream Warrior Pictures தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.