தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு. கட்டுப்பாடுகள் என்ன?

கொரோனா இரண்டாம் அலை அதி தீவிரமாக பரவி வரும் சூழலில் கடந்த 20-ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த இரவு நேர ஊரடங்கில் தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, வாடகை கார் போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது.

அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. அதே போல் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

lockdown news tamil

தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கில் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், டாஸ்மாக், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை.

இந்த முழு ஊரடங்கை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளான மருத்துவமனைகள், பால் வினியோகம், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கை கண்காணிப்பதற்காக 250-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.