குலு குலு திரை விமர்சனம்
ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘குலு குலு’. இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
அமேசான் காட்டில் பிறந்த சந்தானம் வெவ்வேறு நாட்டில் நாடோடியாக பயணம் செய்து பல மொழிகளை கற்றுக்கொண்டு இறுதியாக சென்னையில் தனக்கென்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறார்.
உதவி என்று யார் வந்து கேட்டாலும் எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்கிறார் சந்தானம். ஒரு நாள், தங்களது நண்பன் கடத்தப்பட்டுவிட்டதாக கூறி சந்தானத்திடம் உதவி கேட்டு சில இளைஞர்கள் வருகிறார்கள். உடனடியாக அவர்களுக்கு உதவி செய்ய புறப்படும் சந்தானம் அவர்களுடைய நண்பனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கூகுள் என்ற கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்துள்ளார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சந்தானம் இப்படத்தில் அதற்கு நேர்மாறாக நடித்து ரசிகர்களை கவருகிறார்.
கவி, ஹரிஷ், யுவராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி என அனைவரும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்துள்ளனர். பிரதீப் ராவத் வழக்கமான வில்லனாக வந்து போகிறார்.
படத்தில் முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. ஒரு சில சில நகைச்சுவை காட்சிகள் பெரிதாக கவரவில்லை.
சந்தோஷ் நாராயணனின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
மொத்தத்தில் ‘குலு குலு’ – சந்தானம் ரசிகர்களுக்கு விருந்து.
