ஜெ. சொத்திற்கு தீபா தான் வாரிசு, ஆனால், போயஸ் கார்டன் இல்லத்திற்கு…. – உயர்நீதிமன்றம் வைத்த செக்…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடிக்கான சொத்துகளை நிர்வகிக்க, தனி அதிகாரி நியமிக்கக் கோரி, அதிமுகவின் புகழேந்தி மற்றும் ஜானகிராமன் சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல், ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்களான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஜெயலலிதாவின் சொத்திற்கு வாரிசுகளாக தங்களை அறிவிக்கக்கோரி, மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் தலைமையில் நடைபெற்று, அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் இருவரையும் சொத்தின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டது. சொத்துகளை நிர்வகிக்க தனி அதிகாரி நியமிக்கக் கோரிய மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதேபோல், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை முழுவதுமாக நினைவு இல்லமாக மாற்றக் கூடாது எனவும், ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றலாம் என குறிப்பிட்டுள்ளது. இதுமட்டுமின்றி போயஸ் கார்டன் இல்லத்தை, தமிழக முதலமைச்சர்களின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து எட்டு வாரத்திற்குள் தமிழக அரசு உரிய பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.