in

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு – மலச்சிக்கலை தடுப்பது எப்படி?

சித்த மருத்துவம் மட்டுமன்றி இன்றைய அலோபதி மருத்துவர்கள் கூட நோயாளியை பார்த்ததும் கேட்கும் முதல் கேள்வி மலம் சரியாக வெளியேறுகிறதா என்பதுதான்.

நோய்கள் உருவாவதற்கு முக்கிய காரணம் மலச்சிக்கல் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்

திருக்குறளில், இதன் பொருள் என்னவென்றால் ஒருவன் உண்ட உணவு செரித்து விட்டது என்பதை அறிந்தபின் உணவு உண்டால் அவன் உடலுக்கு மருந்து என எதுவும் தேவையில்லை என்பதே இதன் கருத்து.

சைவ உணவு, குறிப்பாக காய்கறிகளை உண்பவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதில்லை, மாமிச உணவு, புளிப்பு சுவை அதிகம் உள்ள உணவு போன்றவற்றை அதிகம் உண்பவர்களுக்கு மலச்சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்கிறது.

மலச்சிக்கலால் வரும் தீமைகள்

நரம்பு பாதிப்பு, ஆசனவாய் வழியாக குடல் இறங்குதல், புரைப்புன், மந்தநிலை, தலைவலி, பசியின்மை, அடிவயிற்றில் வலி தோன்றி வயிறு முழுவதும் பரவுதல், குதத்தில் எரிச்சல், தோல் நோய்கள், வயிறு உப்புதல், அசதி, உற்சாகமின்மை, இரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி போன்றவை வரும்.

சில நோய்களின் போதும் மலச்சிக்கல் வரும். குறிப்பாக சர்க்கரை நோயிருந்தால் அறுபது சதத்தினருக்கு இது வரும்.

தைராய்டு சுரப்பி குறைவாக சுரத்தல் இரத்த்தில் கால்சியம் அதிகரித்தல், பொட்டாசியம் குறைதல், மாதவிடாய் வருவதற்கு முன்னான காலம், கர்ப்பக் காலம், வெளி நரம்பு மண்டலம் பாதித்தல், தசைநோய், விபத்து மற்றும் அடிபடுதல் போன்ற பல நோய்களால் மலச்சிக்கலும் அதைத் தொடர்ந்து மூலம் பவுத்திரம் போன்ற பிரச்சனைகளும் வரும்.

மலச்சிக்கல் வராமல் தடுப்பது எப்படி?

அதிகாலையில் பல் துலக்கிய பின் இரண்டு அல்லது மூன்று டம்ளர் தண்ணீர் பருகி வர மலச்சிக்கல் தீரும்

ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்தலாம் அல்லது தினமும் ஏதேனும் பழச்சாறுகள் எடுத்துக்கொள்வது நல்லது

மிளகு ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. மிளகு மற்றும் வெல்லத்தை சமமாக கலந்து அரை ஸ்பூன் உண்டுவந்தால் உணவு நன்றாக ஜீரணம் ஆகும், மலச்சிக்கலையும் தடுக்கும்.

மிளகும், சிரகமும் கலந்து, பொடிசெய்து 10 அல்லது 20 கிராம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம், மந்த ஏப்பம் போன்றவை குணமாகும்

அத்திப் பழத்தை உண்பது மலத்தை வெளியேற்றுவது சிறந்த பங்கு வகிக்கிறது

சுக்குப் பொடியை சிறிது உணவில் கலந்து உண்டால் அஜீரணம் குணமாகும், மலமும் நன்றாக வெளியேறும்

சுக்கை பொடி செய்து ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு ஸ்பூன் கலந்து கொதிக்கவைத்து பின் தேவையான அளவு பாலும் சர்க்கரையும் சேர்த்து குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.

வெந்தய கீரையை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் தீரும்

சாப்பாட்டினை குறித்த நேரத்தில் சாப்பிட வேண்டும்

மலம் கழிக்க காலை நேர உணவிற்கு முன்போ அல்லது பின்போ நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்

இயற்கையாக வரும் மலம், ஜலத்தை வெளியேற்ற தவறாதீர்கள், குடலை சுத்தம் செய்ய உடல் காட்டும் அறிகுறியே இது.

கோதுமை, தானியங்கள், காய்கறிகள், பழங்கள், சாப்பாட்டில் சேர்க்கப்படும் நார்சத்து உள்ள பொருட்கள், இவை அனைத்தும் இறுக்கமான மலத்தை இளக்க பயன்படுவதாக ஆய்வின் மூலம் தெரியவருகிறது

தினமும் முறையான உடற்பயிற்சி செய்வது நல்லது

தேவையற்ற மருந்துகளையும், மாத்திரைகளையும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிட வேண்டாம்

மலச்சிக்கலுக்கு தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். இது மேலும் மலச்சிக்கல் உண்டாக வாய்ப்புண்டு என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.