‘ஜாங்கோ’ திரை விமர்சனம்

‘ஜாங்கோ’ திரைப்படம் தமிழிலில் வெளியான முதல் “Time loop” திரைப்படம். ‘ஜாங்கோ’ என்றால் ஜெர்மானிய மொழியில் ‘மீண்டும் எழுவேன்’ என்று அர்த்தம். அதேபோல்தான், குறிப்பிட்ட நேரம் மீண்டும் மீண்டும் நடக்கும். அந்த நேரத்தில் இருந்து மீண்டு வருவதே படத்தின் கதை.
இப்படத்தை சி.வி. குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் சதீஷ் குமார், மிருணாளினி ரவி, கருணாகரன், ரமேஷ் திலக் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் வரிசையாய் களமிறங்கியிருக்கின்றனர்.
இப்படத்தில், மருத்துவராக வரும் கதாநாயகன் சதீஷ்குமார், கதாநாயகி மிர்ணாளியின் கணவர். கதாநாயகி, ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்நிலையில், ஒருநாள் இரவில் வெளியே செல்லும் சதீஷிற்கு ஒரு விண்கல்லின் கதிர்வீச்சு அவர் மேல் விழுகிறது. அதுநாள் முதல் “Time loop” ஆரம்பமாகிறது.

“Time loop” என்றால் காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை என்னவெல்லாம் நடைபெறுகிறதோ, அதே சம்பவம் அடுத்த நாளும் நடைபெறும். இந்த டைம் லூப்பை வைத்து தன் மனைவிக்கு ஏற்படும் ஆபத்தை எப்படி தடுத்து நிறுத்துகிறார் என்பதே படத்தின் கதை.
நாயகன் சதீஷ்குமார், ஒரு அனுபவ நடிகரை போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மனைவிமீது இருக்கும் காதல், நடக்கும் சம்பவத்தால் வரும் கோபம், மனைவிக்காக ஏங்கும் ஏக்கம் போன்ற காட்சிகளில் அசத்தியிருப்பார். நாயகி மிர்ணாளிணி பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
கருணாகரனின் காமெடி காட்சிகள் சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. படத்தின் முதல் பாதி மெதுவாகவும், பிற்பாதி விறுவிறுப்பாகவும் சலிப்பு தட்டாமல் செல்கிறது. கார்த்திக் கே தில்லையின் ஒளிப்பதிவு, சான் லோகேஷி எடிட்டிங் அருமை.
ஜிப்ரானின் பின்னனி இசை மிரட்டல், படத்தின் விறுவிறுபை கூட்ட பின்னனி இசை இப்படத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறது.