களமிறங்கும் கிருத்திகா உதயநிதி.. காதல் கதையில் இணையும் ஜெயம் ரவி மற்றும் நித்தியா மேனன்!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைந்த அளவில்தான் உள்ளது. இன்னும் பல பெண் இயக்குநர்கள் நிச்சயம் தமிழ் சினிமாவில் விரைவில் உருவாகுவார்கள் என்ற ஒரு மாபெரும் நம்பிக்கையும் கடந்து சில வருடங்களாகவே எழுந்து வருகிறது.
அந்த வகையில் “வணக்கம் சென்னை” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் களமிறங்கியவர் தான் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய மனைவி கிருத்திகா உதயநிதி. கடந்த 2013ம் ஆண்டு சிவா நடிப்பில் வெளியான அந்த படத்தில் இவர் இயக்குநராக அறிமுகமானார்.
அதன் பிறகு சுமார் 5 ஆண்டுகள் கழித்து விஜய் ஆண்டனியின் காளி என்ற திரைப்படத்தை இவர் இயக்கி வெளியிட்டார். இறுதியாக பேப்பர் ராக்கெட் என்ற ஒரு இணைய தொடரை இவர் இயக்கி வெளியிட்ட நிலையில் தற்பொழுது இவருடைய அடுத்த திரைப்படம் குறித்த ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வராகவே வாழ்ந்த ஜெயம் ரவி அவர்களுடைய 33வது திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது.
இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் பிரபல நடிகை நித்யா மேனன் இணைய உள்ளார் என்றும், இது ஒரு முழு நீள காதல் திரைப்படம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசை புயல் ரகுமான் அல்லது அனிரூத் இசையமைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.