கூகுள் குட்டப்பா திரை விமர்சனம்
மலையாளத்தில் வெளியான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ பல விருதுகள் பெற்று நல்ல வரவேற்பை பெற்ற படம். இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி ‘கூகுள் குட்டப்பா’ என்ற பெயரில் தயாரித்து நடித்திருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார்.
தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கூகுள் குட்டப்பா. இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இப்படத்தை இயக்கி உள்ளனர்.

கோயம்புத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கேஎஸ் ரவிக்குமார் வாழ்ந்துவருகிறார். இவருடைய மகன் தர்ஷன் ரோபோடிக் என்ஜினியரிங் படித்து முடித்து விட்டு வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறார். அதற்கு கேஎஸ் ரவிக்குமார் மறுப்பு தெரிவிக்கிறார்.
பிறகு ஒரு வழியாக சமாதானப்படுத்தி ஜெர்மனி செல்லும் தர்ஷன் தனது தந்தையை கவனிக்க ஒரு ரோபோவை அனுப்பி வைக்கிறார். முதலில் ரோபோவை ஏற்க மறுக்கும் ரவிக்குமார் பிறகு அதனுடன் நெருங்கி பழகி வருகிறார்.
அந்த ரோபோவின் பரிசோதனை காலம் முடிந்த காரணத்தால் அந்த ரோபோவை கொண்டு செல்ல தர்ஷன் வருகிறார். ஆனால் ரவிக்குமார் ரோபோவை அனுப்ப மறுக்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தர்ஷனுக்கு அப்பாவாக நடித்திருக்கும் கேஎஸ் ரவிக்குமார் தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். கேஎஸ் ரவிக்குமாரை சுற்றித்தான் முழு படம் நகர்கிறது.
மலையாள திரைப்படம் அளவுக்கு இல்லை என்றாலும் கே எஸ் ரவிக்குமாரின் நடிப்பு சற்று ஆறுதலை தருகிறது. யோகிபாபுவின் காமெடிகளும் ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறது. நாயகி லாஸ்லியாவுக்கு பெரிதாக காட்சிகள் எதுவும் இல்லை.
எளிமையாக முடிக்க வேண்டிய கதையை இரண்டரை மணி நேரம் எடுத்து சென்று இருக்கிறார்கள். ஜிப்ரானின் பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் கூகுள் குட்டப்பா – வேகம் இல்லை
