தாயின் அஜாக்கிரதையால் 3000 கோடியை தொலைத்த மகன்

Reddit எனும் முன்னணி சமூகவலைத்தளத்தில் தனது பெயர் வெளியிட விரும்பாத இளைஞர் ஒருவர் தனது சோகக்கதையை கூறி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தன் கதையை கூறிய அந்த இளைஞர், ‘என் அம்மா செய்த சிறிய கவன குறைவால் நான் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் சுமார் ரூ.3000 கோடியை இழந்துள்ளேன். நான் 2010 ஆம் ஆண்டு, கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் சமயத்தில் இந்திய மதிப்பில் 6 ஆயிரம் ரூபாய்க்கு 10 ஆயிரம் பிட்காயின்களை வாங்கினேன்.
நான் வாங்கிய அந்த சமயத்தில் கிரிப்டோகரன்சி அதிகம் பிரபலம் ஆகவில்லை. ஏதோ ஒரு ஆசையில் வாங்கி, அதன் விவரங்களை எனது லேப்டாப்பில் சேமித்து வைத்திருந்தேன். பின்னர், நான் வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டேன்.
ஆனால், தற்போது Cryptocurrency மார்க்கெட் பற்றி கேள்விப்பட்டதும் நான் வாங்கிய பிட்காயின் ஞாபகம் வந்தது, பின்னர், வீட்டிற்கு சென்று 10 ஆயிரம் பிட்காயின் விவரங்களை வைத்த, லேப்டாப்பை நீண்ட நேரமாக தேடியும் கிடைக்கவில்லை.

அதன்பிறகு, எனது அம்மாவிடம் என் லேப்டாப் எங்கே என கேட்டபோது, அதற்கு அவர் லேப்டாப்பை குப்பையில் வீசி விட்டதாக கூறினார். ஒரு நிமிடம் எனக்கு இருதயமே நின்றுவிட்டது. என்னை கேட்காமல் அந்த லேப்டாப்பை அவர் குப்பையில் வீசியுள்ளார்.
நான் வைத்திருந்த 10 ஆயிரம் பிட்காயின்களின் இன்றைய மதிப்பு 300 மில்லியன் பவுண்டுகள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3000 கோடியாக மாறியிருந்தது. என்னால் இந்த இழப்பை ஜீரணிக்க முடியவில்லை.
மிகவும் மன உளைச்சலில் இருந்தேன். ஆனால் நான் மன உளைச்சலில் இருந்து மீண்டு வந்தாலும், இன்றும் எனது கையில் இருந்து பெரிய தொகை விட்டுப் போய்விட்டதே என தோன்றும். நான் விளையாட்டாக வாங்கி வைத்த பிட்காயின் கடைசி வரை எனக்கு கிடைக்காமலே போய்விட்டது’ என கூறி அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளார்.