Search
Search

திருமணத் தடையை நீக்கி குழந்தை பாக்கியமும் தரும் மணமேல்குடி அம்மன்

manamelkudi jagadeeswara temple history

திருமணத் தடையை நீக்குவதில் மணமேல்குடி அம்மன் சக்தி மிக்கவளாகத் திகழ்கிறாள். இந்த அம்மனை வழிபட்டால் குழந்தை பாக்கியமும் விரைவில் கிட்டும் என்பர்.

பெருமை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகில் மணமேல்குடி இருக்கிறது. 63 நாயன்மார்களில் 22-ஆவது நாயன்மாரான குலச்சிறையார்’ பிறந்து, சிவனை வழிபட்ட தலம் இது. ஒட்டக்கூத்தர் பிறந்த மண்ணும் இதுதான். திருஞானசம்பந்தர் சிவனை வழிபட்ட பெருமையும் மிக்கது.

இது ஒரு சிவத்தலம். மூலவர் லிங்க உருவில் காட்சி தருகிறார். பெயர் ஜெகதீசுவரர். கூடவே அன்னையும் குடிகொண்டிருக்கிறாள். அன்னை ஜெகத்ரட்சகி என அழைக்கப்படுகிறாள்.

திருமணத்தடை நீங்கும்

இக்கோயிலில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் சீக்கிரமே வேண்டுதல்கள் நிறைவேறும் என்கிறார்கள். குறிப்பாகத் திருமணத்தடை நீங்கும், குழந்தை வரம் கிட்டும் என்பர்.

இங்கு தலவிருட்சம் மகிழம்பூ மரம். வில்வ மரமும், அரச மரமும் உள்ளன.

manamelkudi jagadeeswara temple history

புராணக் கதை

குலச்சிறை நாயனார், இந்தப் பகுதியை ஆண்ட பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தார். இவர் சிவபக்தர். பூஜை செய்ய சிவலிங்கத்தை நிறுவ நினைத்தார். வீட்டருகே கிடந்த பெரிய கல்லைப் பார்த்தார். சிற்பியிடம் சொல்லி, அக்கல்லை சிவலிங்கமாக வடிவமைக்கச் சொல்ல வேண்டும் என நினைத்தபடி தூங்கச் சென்றார்.

மறுநாள் காலை வாசலுக்கு வந்து பார்த்தபோது அந்தக் கல் சிவலிங்கமாக மாறியிருந்தது. குலச்சிறை நாயனாருக்கு அளவற்ற ஆச்சரியம், ஆனந்தம். உடனே, அந்த சிவலிங்கத் துக்கு ‘ஜெகதீசுவரர்’ என்று பெயரிட்டு அவர் வழிபட்டு வந்தார்.

அந்த சிவலிங்கம் மற்றும் அம்பாள் சிலை குலச்சிறை யார் வாழ்ந்த மேற்குப் பகுதியிலுள்ள வயல்வெளியில் மண்ணில் புதைந்திருப்பதாகப் பின்னாளில் (1942) தெரிய வந்தது. அந்தப் பகுதியில் சூழ்ந்திருந்த முட்செடிகளை அகற்றி சுத்தம் செய்து தோண்டியபோது, அங்கு சிவலிங்கமும், கூடவே அம்பாள் சிலையும் கிடைத்தது.

உடனே ‘சிவ… சிவ… சிவ… ‘ என பக்திக்குரல் ஒலித்தது. அங்கே சிறு கொட்டகை அமைத்து இறைவனை வழிபட்டனர்.

திருவிழா

இங்கு ‘பௌர்ணமி விழா’ சித்திரை மாதத்தில் 15 நாட்கள் கொண்டாடப்படும். ஆவணி மாதம் குலச்சிறை நாயனார் விழா நடைபெறும். அன்னதானம் வழங்கப்படும். புரட்டாசி மாதம் நவராத்திரி விழா. விஜயதசமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, மார்கழி மாதம் ஒரு வாரம் நடக்கும் திருஞானசம்பந்தர் விழாவும் சிறப்பாக நடை பெறும்.

கோயிலில் மூன்று கால பூஜை உண்டு. அதிகாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும். பூஜை நேரம் காலை 7 மணி, பகல் 12 மணி, இரவு 8 மணி.

Address:

Arulmiku Jagatheswarar Thirukkoyil, Pudukottai District, Manamelkudi, Tamil Nadu 614620

பேருந்து வழித்தடங்கள்

இவ்வூருக்கு சென்னையிலிருந்து அறந்தாங்கி வழியாகப் போகலாம். திருச்சியிலிருந்து புதுக்கோட்டை-அறந்தாங்கி வழித்தடத்திலும், தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை வழியாகவும், இராமநாதபுரம்-தொண்டி-மீமிசல் தடத்திலும் செல்லலாம்.

சிவ பிரதோஷம்

மணமேல்குடி ஊரின் மத்தியில் கோயில் உள்ளது. குழந்தை பாக்கியம் பெற இங்கு ‘சிவபிரதோஷம்’ நடைபெறும். சக்திவாய்ந்த ஜெகதீசுவரர், ஜெகத்ரட்சகியை தரிசனம் செய்து பலன் பெறுங்கள்.

Leave a Reply

You May Also Like