மாஸ்க்குடன் சுத்தும் மஹேந்திரன்.. இவ்வளவு கடினமானதா சினிமா?

மாஸ்டர் மஹேந்திரன், மாஸ்டர் படம் வெளியாகும் முன்பிருந்தே அவருக்கு இந்த பெயர் தான். எனக்கு தெரிந்து அவர் தோன்றிய முதல் திரைப்படம் 1994ம் ஆண்டு வெளியான நாட்டாமை, அப்போது அவருக்கு வயது 3. “உன்ன விட சின்ன புள்ள எப்படி அழகா நடிக்கிது பாரு என்று என் அப்பா இவரை ஒப்பிட்டு என்னை திட்டியதுண்டு”.
தொடர்ச்சியாக பல திரைப்படங்கள் குழந்தை நட்சத்திரமாக தோன்றி நடித்தார், குறிப்பாக இவர் நடித்த இரண்டாவது படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தமிழக அரசின் விருதை பெற்றவர். சுமார் 30 திரைப்படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாகவும் வாலிபராகவும் நடித்துள்ளார் மஹேந்திரன்.
2013ம் ஆண்டு விழா என்ற திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கினர் அப்போது அவருக்கு வயது 22. சினிமாவில் சுமார் 29 ஆண்டுகளாக பயணிக்கிறார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
ஆனாலும் என்னவோ சினிமாவில் தொடர்ந்து பல சறுக்கல்கள், இருப்பினும் இந்த மாஸ்டர் என்றுமே கலங்கியதில்லை. கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற பொன்மொழிக்கு ஏற்ப இதுவரை துவண்டுவிடாமல் எதிர்நீச்சல் போட்டு வருகின்றார்.
தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் இவர் ஏற்று நடித்த குட்டி பவானி கதாபாத்திரம் மஹேந்திரனை மீண்டும் மக்களுக்கு நியாபகப்படுத்தியது என்று தான் கூறவேண்டும். அதே சமயம் சினிமா இவ்வளவு கடினமானதா என்பதை பலருக்கு உணர்த்தும் ஒரு நிகழ்வாகவும் திகழ்கிறது மஹேந்திரனின் வாழ்க்கை.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மஹேந்திரனின் ரிப்பப்பரி என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் ப்ரமோஷன் பணிக்காக எங்கு வெளியில் வந்தாலும் மஹேந்திரன் முகத்தில் மாஸ்க் போட்டுகொண்டு தான் வருகின்றார்.
காரணம், பிரபல இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் ஒரு இணைய தொடரில் நடித்து வருகின்றார். அதில் ஒரு வித்யாசமான கெட்டப்பில் வருவதால் தான் இந்த மாஸ்க். உண்மையில் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருக்கின்றோம் என்பதை விட எந்த உயரத்தில் இருக்கின்றோம் என்பது தான் முக்கியம்.
இத்தனை ஆண்டுகால பயணத்தில் எப்போதும் சோர்ந்துவிடாமல் தொடர்ந்து முயற்சிக்கும் மஹேந்திரனுக்கு வாழ்த்துக்கள். நிச்சயம் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் என்ற சொல்லுக்கு இணங்க வெற்றிக்காக உழைக்கும் மஹேந்திரனுக்கு அதற்கான பாதை விரைவில் திறக்கும் என்று வாழ்த்துவோம்.