திருநங்கை செய்தி வாசிப்பாளர்.. ஸ்டூடியோவில் கதறல்..!

வங்கதேச செய்தி ஊடகத்தில் தாஷ்னுவா அனன் ஷிஷிர் என்ற திருநங்கை வங்க மொழி செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். மகளிர் தினத்தன்று நேரலையில் செய்தி வாசித்து வந்துள்ளார். அப்போது நேரலை முடிந்ததும் ஸ்டூடியோவில் கதறி அழுதுள்ளார். அவர் அழுததை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் பதறி போனார்கள். பின்னர் தான் அது ஆனந்தத்தில் வந்த கண்ணீர் என்பது அவர்களுக்கே புரிந்தது..

இந்த உணர்ச்சிகரமான நிகழ்வு குறித்துப் பேசிய தாஷ்னுவா, ”நான் வளரும் போது பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்துள்ளேன். என்னை இந்த சமூகம் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் சந்தித்த அவமானங்கள் எல்லாம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதோடு பல நிராகரிப்புகளும் சேர்ந்து கொண்டது. ஆனால் இன்று எனது வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள்.இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன். இந்த சமூகம் எங்களைப் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றும் என உறுதியாக நம்புகிறேன்” எனக் கண்ணில் வடிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்தவாறு பேசினார் தாஷ்னுவா.