3 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது ‘நோ மேட்லாண்ட்’ திரைப்படம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் க்ளோயி சாவ் என்கிற சீனப் பெண் இயக்கிய ‘நோ மேட்லாண்ட்’ திரைப்படம் மூன்று ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. இப்படத்தில் நடித்த நாயகி பிரான்சஸ் மெக்டார்மண்டுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான விருது க்ளோயி சாவ் என்கிற சீனப் பெண்ணுக்கு கிடைத்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு கேத்ரின் பிக்லோ என்பவர் ‛தி ஹர்ட் லாக்கர்’ என்ற படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருது வாங்கிய முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது. அந்த வரிசையில் க்ளோயி சாவ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.