மீண்டும் சிவா மனசுல சக்தி.. குஷியான ரசிகர்கள் – தயாராகும் ராஜேஷ்!

கடந்த 2009ம் ஆண்டு ஜீவா, சந்தானம் மற்றும் அறிமுக நடிகை அனுயா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டான திரைப்படம் தான் சிவா மனசுல சக்தி. இன்றளவும் இந்த படத்தின் காதல் காட்சிகளும், நகைச்சுவை காட்சிகளும் குறிப்பாக பாடல்களும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு ஒரு முக்கிய காரணம், இந்த படத்தின் இயக்குநர் ராஜேஷ் அவர்கள் என்றால் அது மிகையல்ல. ராஜேஷ் இயக்கிய முதல் திரைப்படம் சிவா மனசுல சக்தி என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களை தொடர்ச்சியாக இயக்கி வெற்றி படங்களாக கொடுத்து வந்தார் ராஜேஷ்.
தற்பொழுது ஜெயம் ரவியின் முப்பதாவது திரைப்படத்தை இயக்கி வருகிறார் அவர், இந்நிலையில் ரசிகர்கள் பலருக்கு சந்தோஷம் அளிக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதுதான் சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் Sequel படத்தை உருவாக்கும் பணிகள்.
இது தனித்த கதையாக அல்லாமல் அந்த படத்தின் ஒரு தொடர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும், ஜெயம் ரவியின் படத்தை முடித்த பிறகு இந்த படத்தில் ராஜேஷ் பணி செய்ய துவங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீவா, சந்தானம் மற்றும் யுவன் அவர்களின் காம்போவை காண பலரும் ஆர்வமாக இருக்கின்றனர்.