“வதந்திகளை பரப்ப வேண்டம் ப்ளீஸ்”.. பிரபல நடிகரின் தங்கை வேண்டுகோள்!

நடிகர் சரத்பாபு, இந்திய சினிமா அரங்கில் இவருக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. ஆந்திராவில் பிறந்த இவர் ஒரு பெரிய போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்து வந்த நிலையில், இவருக்கு கண்ணில் ஏற்பட்ட சிறு கோளாறு குறித்து அவருக்கு தெரியவந்துள்ளது.
போலீஸ் துறையில் தன்னால் சேர முடியாது என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்துள்ளார், அதன் பிறகு இவர் படித்த கல்லூரி ஆசிரியர்கள் பலர், இவர் அழகாக இருப்பதால் நடிக்க போகலாம் என்று கூறியுள்ளனர். இவருடைய சில உறவினர்களும் இதையே கூற, இவர் மனதிலும் அந்த ஆசை முளைத்துள்ளது.
அதன் காரணமாக 1973ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான ராம ராஜ்ஜியம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்தார். அதன் பிறகு பெரிய அளவில் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், 1977ம் ஆண்டு பிரபல இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
அங்கு துவங்கியது இவருடைய திரைப் பயணம் என்றால் அது மிகையல்ல, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் நடித்து வருகிறார். இறுதியாக இவருடைய நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படம் வசந்த முல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய மிக நெருங்கிய நண்பர் இவர், அவருடன் பல திரைப்படங்களில் இணைந்து நண்பராக நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று மே 3ம் தேதி இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இறந்து விட்டதாக பல செய்திகள் தொடர்ந்து வெளியானது.
ஆனால் இவருடைய தங்கை அந்த செய்தியை மறுத்து, அவர் சிகிச்சை பெற்று வருவது உண்மைதான், ஆனால் அவருடைய உடல்நிலை நல்ல முறையில் தேறி வருகிறது. விரைவில் தன்னுடைய படப்பிடிப்பு பணிகளை அவர் துவங்குவார் என்று கூறியிருந்தார். மேலும் தயவு செய்து மக்கள் வதந்திகளை பரப்பும், நம்பவும் வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.