புஷ்பா திரை விமர்சனம்
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியை சுற்றி இருக்கக்கூடிய மலை பகுதிகளில் கிடைக்க கூடிய அரியவகை செம்மரக்கட்டைகளை வெளிநாடுகளுக்கும் வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்ய கூடிய கூலி தொழிலாளியாக வருகிறார் அல்லு அர்ஜுன்.
இதனிடையே வன அதிகாரியாக வரும் ஃபஹத் பாசிலுக்கும் அல்லு அர்ஜுனுக்கும் மோதல் ஏற்படுகிறது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து எப்படி டான் ஆகிறார் என்பதுதான் படத்தின் கதை.

புஷ்பாவின் முதல் பாதி காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் என நல்ல கலவையுடன் செல்கிறது. குறிப்பாக, நகைச்சுவை பகுதிகள் பார்வையாளர்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த அளவில் ஒரு படத்தை இயக்கியதற்காக இயக்குனர் சுகுமாரை பாராட்டியே ஆக வேண்டும். இரண்டாம் பாதியில் வடிவமைக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளன.
படத்தின் திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. அல்லு அர்ஜுன் வழக்கமாக நடிக்கும் படங்கள் போல் இல்லாமல் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகி ராஷ்மிகா மந்தனா கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.
படத்தில் பல வில்லன்கள் வருவதால் யார் மெயின் வில்லன் என்கிற குழப்பம் ஏற்படுகிறது. தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள அந்த பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். அவர் ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவது இதுவே முதன்முறை.
படம் மூன்று மணி நேரம் செல்கிறது. யாஷ் நடிப்பில் வெளிவந்த KGFபடத்தையும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வடசென்னை படத்தையும் கலந்து பார்த்த ஒரு உணர்வை தருகிறது. ஏற்கனவே பலமுறை பார்த்த கதைதான்.
