ரேபிட் டெஸ்ட் கிட் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாட்டிலும் இந்த ரேபிட் டெஸ்ட் கிட் முறை கையில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 1 லட்சம் ரேபிட் கிட்களை தமிழக அரசு ஆர்டர் செய்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதை துள்ளியமாகவும், விரைவாகவும் கண்டறியமுடியும் என்று நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
பரிசோதனை செய்வதற்கு சிறு துளி ரத்தம் மட்டும் போதும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த பரிசோதனையின் உண்மையான பெயர் இம்யூனோகுரோமோட்டோகிராபி என்பதாகும்.
தற்போது பி.சி.ஆர் என்கிற சோதனை முறையில் கண்டறியப்படுகிறது. இந்த முறையில் சோதனை செய்து கண்டறிவதற்கு 2 மணி நேரத்திற்கும் மேல் ஆகும். ஆனால் இந்த ரேபிட் கிட் மூலம் பரிசோதனை செய்வதால் கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்று 30 நிமிடங்களுக்குள் தெரிந்து விடும்.
தற்போது உள்ள நடைமுறையில் சோதனை செய்துபார்த்தால் 3000 ரூபாய் முதல் 4500 ரூபாய் வரை செலவாகும். ஆனால், ரேபிட் கருவி மூலம் பரிசோதனை செய்தால் ரூ.200 மட்டுமே செலவாகும்.