செல்ஃபி திரை விமர்சனம்
ஜி.வி.பிரகாஷ், கௌதம் மேனன், வர்ஷா பொல்லாமா, வித்யா பிரதீப், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மதிமாறன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்ததுடன், படத்துக்கு இசையும் அமைத்துள்ளார்.

நாயகன் ஜிவி பிரகாஷ் அப்பாவின் வற்புறுத்தலால் இன்ஜினியரிங் படித்து வருகிறார். கல்லூரியில் படிக்கும் போதே அவருக்கு சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. இதனால் தனது நண்பர்களுடன் சேர்ந்து புரோக்கர் வேலையில் ஈடுபடுகிறார். அதனால் ஏற்கனவே அந்த தொழிலில் இருப்பவர்களுக்கும் ஜிவி பிரகாஷ்க்கும் மோதல் உருவாகிறது.
இந்த மோதலில் ஜிவி பிரகாஷின் நெருங்கிய நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அதன்பிறகு ஜிவி பிரகாஷ் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் என்ன என்பதுதான் படத்தின் கதை.
கல்லூரி மாணவனாக நடித்திருக்கும் ஜிவி பிரகாஷ் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காலேஜில் மாணவரை சேர்க்க ஜிவி பிரகாஷ் செய்யும் வேலைகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜிவி-க்கு ஜோடியாக வரும் வர்ஷா பொல்லம்மாவிற்கு பெரிதாக கதையில் முக்கியத்துவம் இல்லை. அடிக்கடி ஜிவியைத் தேடிச் சென்று கொஞ்சமாகக் காதலித்துவிட்டுப் போகிறார்.
தனியார் மருத்துவக் கல்லூரியின் முக்கியமான புரோக்கர் கதாபாத்திரத்தில் கவுதம் மேனன் நடித்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸில் லுங்கி மற்றும் கத்தியுடன் அவர் சண்டையிடும் காட்சியில் சிறப்பான நடிப்பை காட்டியுள்ளார்.
பெரிய காலேஜில் தன் பையன் படிக்கவேண்டும் என்ற பெற்றோர்களின் ஆசையை புரிந்து கொண்டு அவர்களிடம் புரோக்கர் கும்பல் செய்யும் வேலைகளை படமாக எடுக்க முயற்சித்த இயக்குனர் மதிமாறனை பாராட்டலாம்.
பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கிறது.
மொத்தத்தில் இந்த செல்பி நிச்சயம் மனதில் பதியும்.
