‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் கைவிடப்பட்டதா? கடுப்பாகிய செல்வராகவன்

‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் கைவிடப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு இயக்குநர் செல்வராகவன் காட்டமாக பதிலளித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளிவந்தது. இதில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியான சமயத்தில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஏமாற்றம் தந்தது.

திடீரென ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு பிரத்யேகமான ரசிகர் கூட்டம் ஒன்று உருவாகி காலப்போக்கில் பலராலும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பல்வேறு திரையரங்குகளில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டது.

Advertisement

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பாகம் எப்போது என்ற கேள்வி இயக்குநர் செல்வராகவனிடம் தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது. அதன் பிறகு கடந்த ஜனவரி மாதம் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் அதில் தனுஷ் நடிப்பதாகவும், படம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பாகத்தின் பட்ஜெட் கையை மீறிச் செல்வதால் படத்தைக் கைவிடும் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இது குறித்து இயக்குநர் செல்வராகவனிடம் கேட்ட போது ”அந்த மர்மமான முன் தயாரிப்புப் பணிகள் எப்போது நடந்தன? அந்த மர்மமான தயாரிப்பாளர் யார்? தயவுசெய்து உங்களுக்கு செய்தி கொடுப்பவர்களிடம் கேட்கவும்” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.