சேத்துமான் திரை விமர்சனம்
மாணிக்கம்,அஸ்வின், பிரசன்னா பாலசந்திரன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சேத்துமான். எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ சிறுகதைதான் இந்த சேத்துமான். பா.ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கிய இப்படம் இன்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
நாமக்கல் அருகே உள்ள கிராமத்தில் பூச்சியப்பா (மாணிக்கம்) தனது பேரன் குமரேசன் (அஸ்வின்) உடன் வாழ்ந்து வருகிறார். மாட்டுக்கறியை சாப்பிட்டதால் ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட தாய், தந்தையை இழுந்து தவிக்கும் குமரேசன் தாத்தாவிடம் வாழ்ந்து வருகிறான்.

குமரசேனை எப்படியாவது படிக்க வைத்து, நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என பூச்சியப்பா கடுமையாக உழைக்கிறார். அந்த ஊர் பெரிய பண்ணையாரான வெள்ளையனுக்கு (பிரசன்னா பாலசந்திரன்) உதவியாகவும் இருக்கிறார்.
இதனிடையே வெள்ளையனும் அவரது குழுவும் இணைந்து சேத்துமான் கறி (பன்றிக்கறி) சாப்பிட ஆசைப்படுகின்றனர். அதை சுவையாக சமைத்து கொடுக்கிறார் பூச்சியப்பன். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதே மீதிக்கதை.
தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாணிக்கம், பேரனாக வரும் அஸ்வின் இருவரின் நடிப்பும் படத்துக்கு மிகப்பெரிய பலம்.
பண்ணையார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரசன்னா பாலசந்திரன் பண்ணையாருக்கே உரித்தான உடல்மொழியில் அசத்தியிருக்கிறார்.
படம் தொடங்கியதிலிருந்து ரேடியோ, பேப்பர் வழியாக குடியரசுத் தலைவராக ராம் நாத் கோவிந்த் பதவி ஏற்கிறார் என்ற செய்தி ஓடிக்கொண்டேயிருக்கிறது. என்னதான் குடியரசுத் தலைவர் பதவி கிடைத்தாலும், உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னும் ஒடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக படம் பதிவு செய்கிறது.
பிந்து மாலனியின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு முக்கிய பங்காற்றுகிறது.
மொத்தத்தில் ‘சேத்துமான்’ விருந்தை ருசிக்கலாம்.
