ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள சிவகுமாரின் சபதம் திரை விமர்சனம்
ஹிப்ஹாப் தமிழா ஆதி, மாதுரி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்தை இயக்கி இசையமைத்துள்ளார்.
வரதராஜன் என்பவர் காஞ்சிபுரத்தில் பட்டு செய்வதில் சிறந்தவராக இருக்கிறார். இவருடன் வேலை பார்க்கும் சந்திரசேகர் என்பவர் சூழ்ச்சி செய்து சென்னையில் பெரிய துணிக்கடை ஒன்றை ஆரம்பிக்கிறார். பிறகு வரதராஜனின் மகன் முருகனுக்கும் சந்திரசேகரின் மகளுக்கும் திருமணம் நடக்கிறது.
ஒரு நாள் சந்திரசேகர் முருகனை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். அப்போது வரதராஜனின் பேரன் சிவகுமார் சந்திரசேகருக்கு சபதம் போடுகிறார். அவர் போட்ட சபதம் என்ன? அதை சிவகுமார் நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி முந்தைய படங்களில் நடித்தது போலவே இந்த படத்திலும் நடித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம், தயாரிப்பு, நாயகன் என எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. இதற்காகவே முதலில் ஆதியை பாராட்ட வேண்டும். எல்லாவற்றையும் சரியாக செய்த ஆதி திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டுள்ளார்.

முதல் பாதியில் அடுத்தடுத்து நான்கு பாடல்கள் வருகிறது. அந்த பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. நடனம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக செய்துள்ளார் ஆதி. நாயகியாக வரும் மாதுரி கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு அருமை.
விவசாயத்தைப் பற்றி ஏராளமான படங்கள் வந்துள்ளன.நாம் நெசவாளர்கள் பற்றிப் படம் எடுக்கலாம் என்று பட்டு நெசவு குறித்துப் பதிவு செய்துள்ளார் ஆதி. முருகன் கதாபாத்திரத்தில் ஃபிராங்க் ஸ்டார் ராகுல் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். நல்ல காட்சிகளைக் கூட காமெடி செய்கிறேன் என்ற பெயரில் காலி செய்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் சிவகுமார் போட்ட சபதத்தில் ஒன்றும் இல்லை.
