ஜி வி பிரகாஷ் பற்றிய சில உண்மைகள்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த “ஜென்டில்மேன்” படத்தில் “சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே” என்ற பாடலை தொடங்கி வைக்கும் பாடகராக அறிமுகமானவர் தான் ஜி வி பிரகாஷ். தற்போது தமிழ்த் திரைப்பட முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருகிறார்.

ஷங்கர் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு கிரீடம், பொல்லாதவன், சேவல், அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், ஆடுகளம், தலைவா என 50க்கும் மேற்பட்ட படங்களில் இசை அமைத்து இருக்கிறார்.

தலைவா படத்தில் விஜய் பாடும் பாடலுக்கு ஒரு சின்ன அசைவில் நடனமாடினார். அவருக்கும் நடிக்க ஆசை இருப்பதாக கருதிய தயாரிப்பாளர், டார்லிங் படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் என நடிக்க தொடங்கிவிட்டார். சமீபத்தில் வெளியான சர்வம் தாளமயம் என்ற படத்தில் ஒரு இசை ரசிகனாக அசத்தியிருப்பார்.

இவர் ஒரு சமூக பொறுப்பாளி என பலர் பாராட்டி வருகின்றனர். 2015 இல் சென்னை வெள்ளப் பெருக்கின்போது அரசியல்வாதிகளால் செய்ய முடியாத முயற்சிகளை இவர் செய்து வந்தார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகாக இசை நிகழ்ச்சி நடத்தி பணத்தை அனுப்பினார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நேரடியாக ஆதரவு கொடுத்தவர். காஜா புயலால் டெல்டா மாவட்டம் பாதித்த போது அந்த மக்களுக்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறினார். மக்களை பாதிக்கும் எந்த நிகழ்ச்சியானாலும் முதல் ஆளாக தன்னை நிறுத்திக் கொள்ளும் சமூக கலைஞனாக செயல்பட்டு வருகிறார்.

ஜி வி பிரகாஷ் 2020 வரை கால்ஷீட் நிரப்பியுள்ளார். 2020இல் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வரவிருக்கும் திரைப்படங்கள், கேடி பில்லா கில்லாடி ரங்கா 2. வெர்ஜின் மாப்பிள்ளை, 100% காதல், கெட்ட பயடா இந்த கார்த்தி, 4 ஜி, பாட்ஷா என்கிற ஆண்டனி போன்ற படங்கள் வெளிவருகிறது.