ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என தமிழ் தேசிய பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அடக்குமுறை நோக்கில் போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என்று கடந்த 24-ந் தேதி சட்டசபையில் அறிவித்ததற்கு தங்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று காவிரி நீர் உரிமைக்காக அறப்போராட்டம் நடத்திய காவிரி பாசனப் பகுதி மாவட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளையும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அறப்போராட்டங்கள் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் அறவழி ஜனநாயாக ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் போன்வற்றை எல்லாம் தடை செய்து, குற்றவியல் நடைமுறை சட்டம் 151-ன் கீழ் முன் தடுப்பு கைது செய்து மண்டபங்களில் வைப்பார்கள். மாலையில் விடுவிப்பார்கள். ஆனால் வெளியில் சொல்லாமல் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வைத்துக் கொள்வார்கள்.

Advertisement

அதுபோன்ற நடைமுறைகள் தங்கள் ஆட்சியில் இனிமேல் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜாமீன் மறுப்பு பிரிவுகள் போடப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.