சென்னை: உலகின் புகழ்பெற்ற ஈஃபெல் டவரை விட உயரமாக காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் இந்தியாவின் கட்டிடக் கலையை உலகளவில் மீண்டும் புகழ்பெறச் செய்துள்ளது. இந்த செனாப் ரயில் பாலத்தின் முக்கிய தூணாக இருந்து 17 ஆண்டுகள் கடுமையாக உழைத்தவர் தென்னிந்தியாவின் பேராசிரியை, பொறியியல் வல்லுநர் கலி மாதவி லதா.

மாதவி லதா: சாதனையின் பாதை
ஆந்திர மாநிலம் ஏடுகுண்டலபாடு அருகே உள்ள விவசாய குடும்பத்தில் பிறந்த மாதவி லதா, தனது பள்ளிப்படிப்பை அரசு பள்ளியில் முடித்தார். ஆரம்பத்தில் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தாலும், ஏழ்மை காரணமாக அது நிறைவேறவில்லை. அதனால் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, 1992-ல் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (JNTU) சிறந்த மதிப்பெண்களுடன் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்.
பின்னர் NIT வாரங்கலில் M.Tech (Geotechnical Engineering) முடித்து கோல்டு மெடல் பெற்றார். 2000-ல் ஐஐடி மெட்ராஸில் பிஹெச்.டி. செய்து, 2002-03ல் இந்திய அறிவியல் நிறுவனம் (IISc)யில் ராக் இன்ஜினியரிங் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் ஐஐடி குவாஹாத்தியில் உதவி பேராசிரியராக பணியாற்றிய பின்னர், IISc-ல் சிவில் இன்ஜினியரிங் துறை ஆசிரியராக பணியாற்றி, பல நூறு மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.
பெண்கள் சவால்கள் மற்றும் சாதனைகள்
பொறியியல் துறையில் பெண்கள் குறைவாக இருந்த காலகட்டத்தில், தனித்துவமான கழிப்பறை வசதி இல்லாத சூழலில் கூட மாதவி லதா போராடி, பெண்கள் இந்த துறையில் சமமாக பங்கேற்க வழி வகுத்தார். இவர் Sustainable Technologies மையத்திற்கும் தலைமை தாங்கி, பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்.
செனாப் ரயில் பாலம்: இந்தியாவின் புதிய சாதனை
2023 ஜூன் 6 அன்று பிரதமர் மோடி திறந்து வைத்த செனாப் ரயில் பாலம் காஷ்மீரின் கத்ரா பகுதியில், செனாப் நதியின் ஆற்றுப்படுகையில் இருந்து 1,178 அடி (359 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இது உலகின் உயரமான ரயில் பாலமாகும், ஈஃபெல் டவரை விட 29 மீட்டர் மேலாக உள்ளது.
- கட்டுமான செலவு: ₹1,486 கோடி
- திட்டம்: உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பின் ஒரு பகுதியாகும்
- கட்டுமானம்: 2004-ல் துவங்கி, 2023-ல் நிறைவு பெற்றது

கட்டுமான சவால்கள்
இமாலய மலை அடிவாரப்பகுதியில் அமைந்த இந்த பாலம், நில அதிர்வு, அதீத காற்று, குண்டு வெடிப்பு போன்ற பல சவால்களை எதிர்கொண்டு கட்டப்பட்டது. செனாப் நதி அருகாமையில் இருப்பதால் நில சரிவு அபாயமும் இருந்தது. இந்த சவால்களை இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் திறமையாக சமாளித்து, பாலத்தை வெற்றிகரமாக கட்டி முடித்தனர்.
STEAM துறையில் பெண்களின் பங்கு
2022-ல் இந்தியாவில் STEAM துறையில் 75 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர். அதில் மாதவி லதா ஒருவராக இருந்தார். பெண்கள் குறைவாகச் சாதிக்கும் துறையில் பல போராட்டங்களை கடந்து சாதனை படைத்த இவர், இந்தியா மட்டுமல்ல உலகிற்கு முன்மாதிரியாக விளங்குகிறார்.