Youtube பார்த்து பைக் திருடி மாணவிகள் முன் சீன் போட்ட மாணவர்கள்… கெத்து காட்டிய போலீஸ்

மும்பை மேற்கு புறநகர்ப் பகுதியில் பல இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருவதாக போலீஸாருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரிக்க தொடங்கினர். இருசக்கர வாகனங்கள் திருட்டு நடந்த அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனை தெரிந்து கொண்டுதான் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டுகிறார்கள் என போலீஸார் கண்டுபிடித்தனர். இதனால் குற்றவாளிகளை பிடிப்பது போலீஸாருக்கு கடும் சவாலாக இருந்தது.

இதேபோல், கடந்த மாதம் கோரேகாவ் பகுதியில் இருசக்கர வாகனம் ஓன்று காணாமல் போனது. அதனை கண்டுபிடிக்க போலீஸார் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்தனர். ஆனால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கோரேகாவ் பகுதியில், சந்தீப் கெய்க்வாட் என்ற மாணவன் அங்கு இருக்கும் கல்லூரி மாணவிகளை ஈர்க்க பலவகையான இருசக்கர வாகனங்களில் வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் கெய்க்வாட்டை பிடித்து விசாரித்த போது, இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதை அந்த மாணவன் ஒப்புக்கொண்டார்.

mumbai news

மேலும் போலீசார் விசாரணையில், இருசக்கர வாகனங்களை சாவி இல்லாமல் திறப்பது எப்படி என்பதை Youtube மூலம் பழகி அவரது நண்பர்கள் மகேஷ் ஸ்வாமி, கணேஷ் சவான், யோகேஷ் ஆகியோரும் இணைந்து ஆள்நடமாட்டம் மற்றும் கண்காணிப்பு கேமரா இல்லாத இடங்களில் இந்த திருட்டு சம்பவத்தை நடத்தியுள்ளது தெரியவந்தது.

Advertisement

இதனை முதலில் மகேஷ் ஸ்வாமிதான் தன் அப்பாவின் இரு சக்கர வாகனத்தை வைத்து பழகி இருக்கிறான். இதனை தன் நண்பர்களுக்கும் காட்டியிருக்கிறார். பின்னர் அவர்களுக்கு கற்றும் கொடுத்துள்ளார். அதன்பிறகு, நான்கு பேரும் ஜாலிக்காக மட்டுமே இருசக்கர வாகனங்களை திருடி வந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “திருடிச்செல்லும் இரு சக்கர வாகனத்தில் எரிபொருள் தீர்ந்து விடவும், அப்படியே வாகனத்தை அங்கேயே விட்டுச்செல்வதை நான்கு பேரும் வழக்கமாக கொண்டிருந்தனர். திருடிய இருசக்கர வாகனங்களில் மாணவிகள் முன் பந்தா காட்டுவதற்காக நான்கு பேரும் சென்றுள்ளனர். நான்கு பேருமே கல்லூரி மாணவர்கள். அவர்களிடமிருந்து 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.