தமிழகத்தில் கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. அதே வேளையில் பணியாளர்கள் மட்டும் சென்று ஆகம விதிப்படி, வழக்கமான பூஜைகளை செய்து வந்தனர்.

கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருவதால் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இன்று முதல் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன.

அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலையிலேயே கோவில்களில் திரண்ட திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபாடு செய்து வருகின்றனர்.

Advertisement

கோவில்களில் பக்தர்களின் உடல் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டு கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் பூ, பழம், மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

ராமேஸ்வரம் கோவிலில் வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட அனுமதி இல்லை.

சுமார் 2 மாதங்களுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.