டெடி படத்தின் திரை விமர்சனம்
ஆர்யா, சாயிஷா, சதீஷ், கருணாகரன், மகிழ் திருமேனி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நாணயம்,நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக்டிக்டிக் படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
புதியதாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதில் திறமையும் ஆர்வமும் கொண்டவர் ஆர்யா. சாயிஷா ஒரு சிறிய விபத்தில் சிக்கி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அவருக்கு மருந்து செலுத்திய பிறகு அவர் கோமா நிலைக்கு தள்ளப்படுகிறார்.

இந்நிலையில் அவருடைய ஆவி அங்குள்ள ஒரு டெடி பொம்மைக்குள் சென்றுவிடுகிறது.அந்த பொம்மை ஆர்யாவிடம் சென்று தனது நிலைமையை எடுத்து சொல்கிறது.
உடல் உறுப்புகளை திருடும் கும்பல் தான் சாயிஷாவின் இந்த நிலைமைக்கு காரணம் என ஆர்யா கண்டுபிடிக்கிறார். அதன் பிறகு அந்தக் கும்பலை ஆர்யா கண்டுபிடித்தாரா? இல்லையா? பொம்மையில் இருக்கும் சாயிஷாவின் ஆவி சாயிஷாவின் உடலுக்கு சென்றதா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஆர்யா வழக்கம் போல தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்ப காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் சாயிஷா வந்து செல்கிறார்.
எதிலும் வல்லவர் என்று ஆர்யாவை காட்டியிருப்பது பல இடங்களில் பொருத்தமாக இருந்தாலும் சில இடங்களில் ஏற்கும்படி இல்லை.
இமான் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துள்ளது. பின்னனி இசையும் மிரட்டியிருக்கிறார். சக்தி சரவணின் சண்டைக் காட்சிகளில் இரயில் வரும் சண்டைக் காட்சி மிரட்டல்.
ஆர்யாவை தவிர பிற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லை. டெடி கதாபாத்திரத்திற்கான விஎஃப்எக்ஸ் பணி மிக அருமை.
சதீஷ், கருணாகரன் இருவரும் காமெடி என்ற பெயரில் எதோ செய்து விட்டு போகிறார்கள். வில்லன் மகிழ் திருமேனியின் கதாபாத்திரம் பெரிதாக கவரவில்லை.
