நடிகர் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தங்கலான். விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, இங்கிலாந்து நடிகர் டானியல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ. ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.
கதாநாயகன் தங்கலான் (விக்ரம்) தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் மக்களுடன் வாழ்ந்து வருகிறார். வெள்ளைக்காரர்களின் அரசாங்கத்தின் கீழ் இருக்கும் மிராசுக்கள், தங்கலானுடைய மக்கள் அனைவரையும் அடிமைபோல் நடத்தி வருகிறார்கள்.
இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற வேண்டுமென்றால் வெள்ளைக்காரனுக்கு தங்கம் தேடுவதில் உதவி செய்ய வேண்டும் என பசுபதி, ஹரி உள்ளிட்ட சிலருடன் தங்கலான் ஆனை மலைக்கு செல்கிறார். இதன்பின் என்ன நடந்தது? அங்கு அவர்கள் என்னென்ன சவால்களை எல்லாம் சந்தித்தார்கள் என்பது தான் படத்தின் மீதி கதை.
உலகத் தரம்வாய்ந்த நடிப்பை வழங்கியுள்ளார் சியான் விக்ரம். விக்ரமுக்கு போட்டிபோட்டு திரையில் மிளிர்கிறார் பார்வதி. ஆரத்தியாக நடித்த மாளவிகா மோகனன், அவரை காட்டும் இடங்களில் வரும் சிஜி காட்சிகள் என அந்த பகுதியும் சிறப்பாகவே உள்ளது.
ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்த கொடுத்துள்ளது. ஆடை வடிவமைப்பு, கலை இயக்கம் இரண்டுமே நம்மை தங்கலான் உலகத்திற்கு கொண்டு செல்கிறது.
படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் சியான் விக்ரமின் நடிப்பு மற்றும் இந்த படத்திற்காக உழைப்பை கொட்டியிருக்கும் அத்தனை டெக்னீஷியன்களின் பங்களிப்பு மற்றும் நடிகர்களின் நடிப்புக்காகவே இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்.